பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

நெஞ்சக்கனல்


தோல்விகள் போர்க்களத்தில் நிர்ணயிக்கப்படாமல் பொது மேடையிலேயே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிற இந்த நாளிலும் அந்த வெற்றியை நிரூபிக்கச் செல்வாக்கு என்ற வெளிச்சத்தைப் போட்டுக் காண்பிக்கத்தான் வேண்டியிருக்கிறது. கமலக்கண்ணன் தமது முதல் மேடையேற்றத்தின் போதே அந்த வெளிச்சத்தைத் தாராளமாகப் போட்டுக்காண்பித்து விட்டார். திண்டிவனத்துக்குஅருகில் அந்தக் குக்கிராமத்து ஆண்டு விழாவுக்குப் போகவேண்டிய தினத்தன்று காலையிலிருந்தே அவருடைய சுறுசுறுப்புத் தொடங்கிவிட்டது.

“என்ன சார்! சாயங்காலம் ரேஸ் கிளப்பில் பார்க்கலாமில்லியா? நம்பகமான ‘டிப்ஸ்’ ஏதாவது கிடைச்சிருக்கா?” என்று விடிந்ததும் விடியாததுமாக அன்றையக் குதிரைப் பந்தயத்தைப் பற்றி ஃபோன் செய்தார் ஒரு சிநேகிதர். அவருக்கு ஃபோனில் பதில் கூறியபோதுகூட “எஸ்க்யூஸ் மீ சார்! இன்னிக்கு ரேசுக்கு நான் வரப்போறதில்லே. எனக்கு வெளியூர்லே ஒரு மீட்டிங் இருக்கு... ரெண்டு மணிக்கே புறப்பட்டுடனும்...” என்று இழுத்தார் அவர்.

“அடடே! நீங்ககூட மாறிட்டீங்க போலிருக்கே... சோஷியல் ஆக்டிவிடீஸ்ல எல்லாம் இறங்கிட்டீங்களா; என்ன?”– என்று எதிர்ப்புறம் பேசியவர் சிரித்துக் கொண்டே வினாவியதைக் கூடக் கமலக்கண்ணனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வேறு சிலருக்கு அவரே ஃபோன் செய்து தாம் அன்று மாலை ஓர் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்துத் தொடங்கி வைக்கப் போவதை வலுவில் தெரிவித்தார்.அந்த ஆண்டுவிழாவைப் பற்றி விசாரித்தவர்களுக்கு எல்லாம் பிரமாதமாகப் பதில் கூறி மகிழ்ந்தார் அவர். விசாரித்துக் கேட்காதவர்கள் மேலெல்லாம் கோபம் கோபமாக வந்தது அவருக்கு.

“ரொம்ப ஸ்டிரெயின் பண்ணிக்காதீங்க...வெளியூர் கிளியூர்லாம் ஏதுக்கு? உடம்பைக்கவனிச்சிக்கவாணாம்?”– என்று ஆதரவாக விசாரித்த ஒரு நண்பரிடம்,

“என்ன சார் செய்யறது? யாரோ சென்ட்ரல் மினிஸ்டர். வரேன்ருந்தானாம். வரலே. நீங்கதான் வரணும்னாங்க...