பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
35
 


தட்டமுடியலே–காந்தியன் ‘மெத்தேட்’லே ஸிம்பிளா பணிபுரியிற சங்கம்... நாம ஆதரிக்கனுமில்லியா?”– என்று. கொஞ்சம் தாராளமாகவே வெளிச்சத்தைப் போட்டுக் காட்டினார்.

“இதென்ன? காலையிலேருந்து பைத்தியம் மாதிரி எல்லாரிட்டயும் இதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க... சரியான பைத்தியந்தான் பிடிச்சிருக்கு ஒங்களுக்கு” என்று அவருடைய மனைவி சொல்லிச் சிரித்ததுகூட அவருக்குப் பெருமையாகத்தான் இருந்தது. முழுமையாக நான்கு பக்கம் கூடத் தேறாத அந்தப் பிரசங்கத்தைத் தாம் பேசும் போது கூட்டத்திலிருப்பவர்களுக்கு வழங்குவதற்காக ஓர் ஆயிரம் பிரதிகள் அச்சிட்டும் வைத்துக்கொண்டிருந்தார் அவர் இரண்டரை மணிக்குப் புறப்படலாம் என்று முடிவு செய்திருந்தார் அவர் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்திற்குமுன் ஃபோன் செய்த ஒரு நண்பர்,

“பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் யாராவது வந்தாக் கூட்டிக் கிட்டுப் போகப்படாதோ? இவ்வளவு தூரம் போறது தான் போlங்க. பேப்பர்லியாவது வரட்டுமே? நமக்குத் தெரிஞ்ச ரிப்போர்ட்டர் ஒருத்தர் இருக்காரு. அவருக்கே போட்டோவும் பிடிக்கத் தெரியும்...நம்ம காரிலேயே பிக்... அப் பண்ணிட்டுப் போய் வர்ரபோது கொண்டாந்து ‘டிராப்’ பண்ணிட்டாப் போதும்’–என்றார்.

“ஒ எஸ்! முடிஞ்சா ஃபோன் பண்ணி இங்கே வரச் சொல்லிடுங்க... நான் இன்னும் கொஞ்ச நேரம் அவருக்காக ‘வெயிட்’ பண்றேன்...” என்று கமலக்கண்ணன் அந்த நண்பரிடம் ஃபோனில் குழைந்தார்.

“அந்த ரிப்போர்ட்டரைக் கொஞ்சம் கவனிச்சிக்குங்க... கூட்டம் முடிஞ்சதும் ஏதாவது பார்த்து...”

“ஒ எஸ் டெபனட்லி...அதாவது...”

“நாட் லெஸ் தென் ட்வெண்டிஃபைவ் ருபீஸ்...”

டெலிபோன் உரையாடல் இவ்வளவில் முடிந்தது. கமலக்கண்ணன் தும்பைப்பூப் போல் கதருடைஅணிந்து– அங்கவஸ்திரத்தையும் தரித்துத் தயாரானார்.