பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37


ஒடிப் பாசத்தோடு, ஒரு கணம் அங்கே தங்கி மீண்டது அவர் மனம். கூட வருகிற நிருபரோடு ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காக சூயஸ்கெனால் விவகாரம், ஈரோப்பியன் காமன் மார்க்கெட், நாட்டோ, விட்டோ போன்றவைபற்றி ஏதோ பேச்சுக் கொடுத்தார். ஆனால் பாவம் அந்த சீஃப் ரிப்போர்ட்டருக்கு அவற்றையெல்லாம் பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. கோடம்பாக்கத்திற்குப் புதிதாக வந்திருக்கும் நட்சத்திரங்கள், படப்பிடிப்புக்கள், இவை பற்றி மட்டுமே மளமளவென்று பேசினார். கலைச்செழியன். அதற்குபின் ராயபுரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஒரு குழாயடிச் சண்டையைப் பற்றியும் வியந்து கூறினார். சண்டைபோட்ட இரண்டு பெண்களும் பரஸ்பரம் ரவிக்கையைக் கிழித்துக்கொண்டதை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்தார் நிருபர்.பேச்சை நிறுத்திவிட்டுக் காரிலேயே மெல்லக் கண்களை முடித் தூங்கத் தொடங்கினார் கமலக்கண்ணன்.

மறுபடி அவர் கண்களைத் திறந்தபோது கார் திண்டி வனத்துக்குப்போகிற பெரிய சாலையிலிருந்து விலகிக் காந்திய சமதர்ம சேவாசங்கம் இருந்த கிராமத்திற்குப்போகும் சிறிய செம்மண் ரஸ்தாவில் சென்றுகொண்டிருந்தது. அந்தச் சங்கம் கிராம சேவகிகளுக்குப் பயிற்சியளித்து அனுப்பும். ஒரு ‘வில்லேஜ் டிரெயினிங் சென்டர்’–போலிருக்கிறது. வெள்ளை வெளேரென்று. கதர்ப்புடவையணிந்த இளம் பெண்கள் கூட்டமும் அவர்களுடைய பிரின்ஸிபால், ஆசிரியைகளும் ஆசிரம வாசலிலேயே அவருடைய காரை எதிர் கொண்டு வரவேற்றார்கள். கமலக்கண்ணன் அங்கேயே காரை நிறுத்தி இறங்கி அவர்களோடு மேடையை நோக்கி நடக்கலானார். அப்படி அவர் அந்தப் பெண்கள் கூட்டம் புடைசூழ நடப்பதை ஒரு படம் பிடித்துக்கொண்டார் நிருபர் கலைச்செழியன். திடீரென்று அத்தனை பெண்களுக்கும் நடுவே பேசிக்கொண்டு நடந்து செல்வது சிரமமாக இருந்தது அவருக்கு

நெ – 3