பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

39


பதற்றத்திலேயே கமலக்கண்ணனுக்குச் சொல்ல நினைத்த தெல்லாம்மறந்து போயிற்று. இரண்டாவதாக அவர் மென்றுவிழுங்கி ஏதோ சொல்ல முயன்று முன் வந்தபோது யாரோ மாலையோடு வந்து எதிரே நின்றுவிட்டார்கள், கடைசியில் வேறு வழியின்றி அச்சிட்டுக்கொண்டு வந்திருந்த பிரசங்கத்தை அப்படியே படிக்கத் தொடங்கிவிட்டார் அவர். அதன் பிரதிகளைக் காந்திய சமதர்ம சேவா சங்கப்பெண்கள் கூட்டத்தில் வழங்கத்தொடங்கினார்கள். கமலக்கண்ணன் வேர்க்க விறுவிறுக்க அதைப்படித்தாலும் அவர்பேசும்போது நடுநடுவே கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டுமென்று பிரின்ஸிபால் அம்மாள் முன்பே சொல்லி வைத்திருந்ததனாலோ என்னவோ, மாணவிகள் நடுநடுவே கரகோஷம் செய்து அவரை வியந்தனர். அந்தக்கரகோஷம் அளித்த உற்சாகத்தில் அச்சிட்டுக்கொண்டு வந்திருந்ததைப் படித்து முடித்த பின் அதில் இல்லாமல் தாமே துணிந்து சொந்தமாக, ‘என்னை இங்கு அழைத்துக் கெளரவித்த உங்களுடைய சங்கத்துக்கு என் மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று ஒரு புது வாக்கியமும் பேசிவிட்டார். கமலக்கண்ணன். தன்னுடைய தலைமையுரையில் பிறர் இரசிக்கவோ வியக்கவோ தகுந்த எந்த அம்சமும் இல்லையென்பது, அவருக்கே தெரிந்திருந்தது. ஆனால் தனக்கு அடுத்தாற்போல் தொடர்ந்து பேசிய ஒவ்வொருவரும் தவறாமல் தன்னுடைய தலைமையுரையைப் பற்றியே வியந்தும், புகழ்ந்தும் வானளாவத் தூக்கி விட்டதைக் கேட்கக் கேட்கத்தான் பிரமாதமாகத் தான் பேசியிருக்கவேண்டும் என்றொரு நம்பிக்கை அவருக்கே வந்து விட்டது. அச்சிட்டுக்கொண்டு வந்து படித்ததற்கே இவ்வளவு பாராட்டானால் சுயமாக எழுந்து பேசியிருந்தால் இன்னும் எவ்வளவு பாராட்டுக் கிடைத்திருக்கும் என்பதையும் இப்போதிருந்தே கற்பனைசெய்யத் தொடங்கி விட்டார் கமலக்கண்ணன். எல்லோரும் தன்னைப் புகழ்ந்து பேசும் போது மேடையில் விறைப்பாக நிமிர்ந்து உட்கார வேண்டும் போல் தோன்றியது அவருக்கு மேடையில்