உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நெஞ்சக்கனல்


அதிகநேரம் உட்கார்ந்து பழக்கமில்லாத அவருக்குநடுவில் ஒரு சிகரெட் புகைக்கவேண்டுமென்று ஆசையிருந்தும் மிகவும் சிரமப்பட்டு அந்த ஆசையை அடக்கிக்கொண்டார்.

“ரொம்ப நல்லாப் பேசிட்டீங்க சார்” என்று நிருபர் கலைச்செழியன் மேடைக்கு வந்து அவர் காதருகே கூறி விட்டுப் போனான். அவன் அப்படிச்சொல்ல வந்தபோது, மேடையேறியதும் கமலக்கண்ணனின் அருகே நெருங்கியதும் தனக்கு அவரோடு ஒரு ‘இன்டிமஸி’–நெருக்கம் இருப்பதாகக் கூட்டத்தினருக்குக் காண்பிக்க முயல்வது போலிருந்ததே தவிரப் பேச்சைப் பாராட்டிக்கூற மட்டும் வந்ததாகத் தோன்றவில்லை. கூட்டத்தின் இறுதியில் தன்னையறியாமலே ஒரு தவறு செய்துவிட்டார் கமலக்கண்ணன். ஒலி பெருக்கிக்காரர்கள் ஒலிபெருக்கியில் பதிவு செய்த தேசீய கீதத்தைப் போட்டிருப்பதை உணராமல் எல்லோரும் ‘அட்டென்ஷனில்’ நிற்பதையும் கவனியாது மெல்ல நகரத் தொடங்கிவிட்டார். முன் வரிசையில் சிலர் அவருடைய இந்த அப்பாவித்தனத்தைக் கண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டுவிட்டனர். அப்புறம் யாரோ சைகைசெய்ததைப் புரிந்து கொண்டு நகரத் தொடங்கிய இடத்திலேயே நின்றார் அவர். தேசியகீதம் முடிந்ததும் பிரின்ஸிபால் அம்மாள் அவரைத் தம்முடைய அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று ‘விஸிட்டர்ஸ் நோட்புக்கை’ நீட்டினாள். அந்த ஆசிரமத்தை வானளாவப் புகழ்ந்து எழுதிக் கையெழுத் திட்டுக் கொடுத்தார் அவர். ஆசிரமம் தோன்றிய விதம், பணிகள் முதலியன பற்றிய சிறு சிறு பிரசுரங்களை அவருக்கு அளித்தாள் அந்த அம்மாள்.

“இந்த நாட்டில் காந்தியசமதர்ம வாழ்வு கிராமங்களில் எல்லாம் மலர வேண்டுமானால் ‘ரூரல்டெவலப்மெண்ட் ஸ்கீம்’ சரியாக அமையவேண்டும். ‘ரூரல்டெவலப்மெண்ட்’ சரியாக அமைவதற்கு நல்ல கிராம சேவகர்களும், கிராம சேவகிகளும் வேண்டும். நல்ல கிராம சேவகர்களும், சேவகிகளும் உருவாவதற்கு இதுமாதிரி ஆசிரமங்கள் தான் பாடுபட முடியும்” என்று அந்த அம்மாள் பிரசங்கபாணியில்விவரித்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/42&oldid=1047315" இலிருந்து மீள்விக்கப்பட்டது