பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

41


போது, ‘சரிதான் இதுமீண்டும் நன்கொடையில் வந்துமுடியும் போலிருக்கிறது’ என்று அநுமானித்துக் கொண்டார் கமலக்கண்ணன். இந்த மாதிரி தேசிய சேவை, காந்திய தர்மம் இவையெல்லாம் அவருக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்துக்கே புதியவை. அவருடைய தகப்பனார் யுத்த நிதிக்கு நிறையப் பணம் கொடுத்து வெள்ளைக்காரனிடம் திவான் பகதூர், சர் பட்டங்களையெல்லாம் பெற்றிருந்த ஒரு ஜஸ்டிஸ் கட்சிக்காரர். மிகமிக ‘கன்சர்வேடிவ்’ ஆசாமி. அவர் காலமான பின்பும் அவருடைய அபிப்பிராயங்கள், கொள்கைகளே நீண்டநாள் அந்தக் குடும்பத்தில் நிலவின. காலநிலையை உத்தேசித்துக் கமலக்கண்ணன் தான் படிப்படியாக மாறினார். அப்படிப்பட்ட குடும்பத்தில் செல்லப்பிள்ளையாக வளர்ந்தவருக்கு ‘ரூரல் டெவ்லப் மெண்ட்’ போன்ற தொடர்கள் திடீர் திடீரென்று காதில் விழத் தொடங்கினால் அவற்றைப் புரிந்துகொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் சிரமமாயிராதா என்ன? நீண்ட நாள்வரை அவருடைய வீட்டில் மாட்டத்தகாத படங்கள் என்ற வரிசையில் காந்தி, சுபாஷ், நேரு, பாரதியார் போன்றவர்களின் படங்கள் தடை செய்யப்பட்டிருந்தன. தகப்பனார் காலமானபின்பே இந்தத் தடை மெல்லமெல்ல நீங்கியது. தடைநீங்கியது என்றாலும் முதல்முதலாக அந்தப் படங்களைச் சுவர்களில் மாட்டும் துணிவு யாருக்கும் வரவில்லை. கமலக்கண்ணனுக்கு வேண்டிய வியாபாரிகள் சிலருடைய கம்பெனிக் காலண்டர்களில் மேற்படியார்களுடைய படங்கள் வரநேர்ந்ததால்–அந்தக் காலண்டர்கள் அவருடைய வீட்டில் மாட்டப்படவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயின. ஆனால் அந்தக் குடும்பத்தைப்பொறுத்தவரை கமலக்கண்ணனின் இந்த மாறுதல் ஒரு ‘டிரான்ஸ்மிஷன் பீரியட்’ என்றுதான் சொல்லவேண்டும். அதனால் தான் இருந்தாற்போலிருந்து காந்தியம், கிராம வளர்ச்சி, கிராம் சேவகர் என்ற பெயர்களைக் கேட்டவுடன் மிரண்டார் அவர். கடைசியில் பிரின்ஸியால் அம்மாள் நேர்டியாகவே பேச்சைத் தொடங்கினாள்.