பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

43


“உங்க பேப்பர் என்ன ‘சர்குலேஷன்’ இருக்கும்?”

“மூண்ரை லட்சத்துக்குமேலே போவுது சார்! வியாழக்கிழமை எடிசன் மட்டும் அரை லட்சம் கூடவே போவுது, அன்னிக்கி ராசி பலனும் சினிமாப் பக்கமும் உண்டு”

“ஆமாம்! நான்கூடப் பார்த்திருக்கேன், ராசிபலனுக்கு எப்பவும் ஒரு மவுஸ் இருக்கு...”

“சினிமாவுக்கு– அதைவிட கிராக்கி இருக்கு சார்!”– என்று அவருடைய அபிப்பிராயம் கலைச்செழியனுடைய திருத்தப் பிரேரணையோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பர்ஸை மெல்லத்திறந்து இரண்டு பத்துரூபாய் நோட்டுக்களையும், ஒர் ஐந்துரூபாய் நோட்டையும் நாசூக்காக உருவி எடுத்துக்கலைச்செழியனிடம் நீட்டினார் கமலக்கண்ணன்.

“நம்பளுக்குள்ள இதெல்லாம் எதுக்கு சார்?”– என்று குரலை இழுத்தபடியே ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்ட நிருபரிடம் “பரவாயில்லை! வச்சிக்குங்க” – என்று அவசியமில்லாமலேயே வற்புறுத்தினார் கமலக் கண்ணன். அவன் ‘நம்பளுக்குள்ள’ என்று சமதை கொண்டாடியதை மட்டும் அவரால் ரசிக்க முடியவில்லை.

“ஆமாம்! உங்க பத்திரிகையோட முதலாளி முன்னாலே வேறே பிஸினஸ் பண்ணிட்டிருந்தாரில்ல...?”

“வேலூர்லே கள்ளுக்கடை வச்சிருந்தார். மதுவிலக்கு வந்தப்பறம்தான் இந்தப் பத்திரிகையை ‘ஸ்டார்ட்’ பண்னினார். இப்ப இதுலேயும் நல்ல லாபம்தானுங்க...”

“வெளியூரிலே எல்லாம்கூட எடிசன் இருக்குப் போலிருக்கே?”

“ஒவ்வொரு ஊரிலேயும் தனித்தனி எடிசன் போடறதினாலே பல செளகரியம் இருக்குங்க...”

– இப்படியே அவர்களுடைய உரையாடல் வளர்ந்தது. கார் மர்மலாங்பாலத்தைக்கடந்து சைதாப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ஒரு டாக்ஸ் ஸ்டாண்டில் நிறுத்தச்சொல்லி நிருபர் இறங்கிக்கொண்டபின் கமலக்கண்ணன் வீடு திரும்பியபோது மணி இரவு பத்துக்கு மேலும் ஆகிவிட்டது. வீட்டில் சமையற்காரனையும், கூர்க்காவையும், பின் கட்டில் தாயையும் தவிர யாரும் இல்லை. ஓர் கால்மணி