பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
நெஞ்சக்கனல்
 


நேரம் முன் ஹாலில் கிடந்த ஆங்கில மாலைத் தினசரியைப் புரட்டுவதில் கழிந்தது. அப்புறம் இரண்டொருவருக்கு ஃபோன்செய்து மாலையில் காந்திய சமதர்ம சேவாசங்கக் கூட்டத்தில் தாம் பேசிய சிறப்பை விவரித்தார். வேறு சிலருக்கு ஃபோன்செய்து ரேஸ் முடிவுகள் பற்றி ஆர்வமாக விசாரித்தார். அதற்குள் மனைவியும் குழந்தைகளுமாகக் காரில் திரும்பிவந்து இறங்கினார்கள். –

“என்ன, கூட்டம் பிரமாதமாக்கும்?”– என்று மனைவி கொஞ்சம் கேலி கலந்த குரலிலேயே விசாரித்தாள்.

“என்னைக் கேட்காதே; நாளைக்குக் காலைத் தமிழ்ப் பேப்பரைப் பார்...” என்று. ஜம்பமாகவே பதில் கூறினார் கமலக்கண்ணன். தன்னுடைய முதற் கூட்டத்தையும், சொற்பொழிவையும் பற்றி அவள் இளக்காரமாகப் பேசுவதை உள்ளூர அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

டைனிங்டேபிளில் எல்லாரோடும் உட்கார்ந்து சாப்பிடும்போது திடீரென்று ஏதோ நினைத்துக்கொண்டவர் போல்,

“நாளைக்குக் கடைவீதிப்பக்கம் போனாத் தேவராஜமுதலி தெருவிலே படக்கடையிலே பெரிய காந்தி படமாப் பார்த்து ஒண்னு வாங்கிட்டுவந்து முன்னாலே மாட்டிடணும். மறந்துடாதே”– என்று சமையற்காரனிடம் உத்தரவு போட்டார் கமலக்கண்ணன்.

“காந்தி படத்தையா சொல்றீங்க?”–என்று மீண்டும் சந்தேகத்தோடு கேட்டுக் கமலக்கண்ணன் தலையை அசைத்தபின்பே சமையற்காரன் தனக்கு இடப்பட்ட உத்தரவை உறுதி செய்துகொள்ள முடிந்தது. படம் முன் ஹாலின் முகப்பில் நுழைந்தவுடன் எல்லார் கண்களிலும் படக்கூடியதாகவும், பெரியதாகவும் இருக்க வேண்டு மென்று கமலக்கண்ணனே மேலும் விவரித்துக் கூறினார். சமையற்காரன் பயபக்தியோடு கேட்டுக்கொண்டான். அவனுக்கு அந்த வீட்டில் இத்தகைய புரட்சிகள் எல்லாம் திடீர் திடீரென்று நிகழ்வது புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றியிருக்க வேண்டும்.