பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை


“...ஆறாதே நாவினாற் சுட்ட வடு” என்று வள்ளுவப் பேராசான் வற்புறுத்துகிறார். ஏன்? குற்ற உணர்வு நெஞ்சில் கனலாக எரிந்து கொண்டிருப்பதால்தான் அந்த வடு ஆறாத புண்ணாக நிலைத்துவிடுகிறது. அந்த நெஞ்சக் கனலை அவித்துவிடும் ‘ஆற்றல்’ உடையவர்களுக்கும், அல்லது அக்கணலே தோன்றாத உள்ளம் படைத்தோர்க்கும் ‘நாவினாற் சுட்ட வடு’ புண்ணாவதில்லை என்பது உலகம் கண்ட அனுபவ உண்மை.

மனச்சாட்சியின் குரலுக்குச் செவி சாய்ப்பவர்களுக்கெல்லாம் ‘நெஞ்சக் கனல்’ தோன்றுவது இயற்கை. அக்கனல் மனிதனை எரித்து விடுவதில்லை. அவனுள்–அவனது பலவீனமாகக் கிளர்ந்தெழும் தீய உணர்ச்சிகளையே எரித்துச் சாம்பலாக்குகிறது. வேள்வித் தீக்குச் சமானமான இந்த “நெஞ்சக்கனல்” அவிந்துவிடாமல் காப்பாற்றிக் கொள்ளும் எந்த மனிதனும் முழு மனிதனாக உயர முடியும். அவ்வாறு உயர்ந்த ஒரு மனிதர் இக்கதையில் வருகிறார்.