பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
49
 


“வாங்க! வாங்க...ஏது இப்படிப் பெரியவங்கள்ளாம் காலங்கார்த்தாலே என்னைத் தேடிக்கிட்டு” என்று வந்திருந்தவர்களைப் புன்முறுவலோடு வரவேற்றார்.

“ஏதோ இன்னிக்கார்த்தாலே உங்க தரிசனம் கிடைக்கணும்னு கடம்பநாதன் கிருபை பண்ணியிருக்கான்...” வந்தவர்களில் முக்கியமானவர் பேச்சைத் தொடங்கினார்.

“செக் அனுப்பிச்சேனே? கிடைச்சிதா...” என்றார் கமலக்கண்ணன். ‘கிடைச்சது மட்டுமில்லே! புனருத்தாரண நிதிக்கு முதல் ‘செக்’ ஐயாயிரத்துக்கு உங்ககிட்டருந்து தான் வந்திருக்கு. மினிஸ்டர் விருத்தகிரீசுவரன்தான் நம்ம நிதிக் குழுவுக்குக் கெளரவத் தலைவர். அவர்கிட்ட உங்க ‘செக்’ விஷயத்தைச் சொன்னோம். உடனே, “அப்பிடியா! கடம்பநாதன் நம்ப கமலக்கண்ணனை முதல் ‘செக்’ அனுப்பப் பண்ணியிருக்கான். அவரையே நிதிக் கமிட்டிக்கு வைஸ்பிரஸிடெண்டா இருக்கச் சொல்லிப் பகவானே கிருபை செய்யறான். நான் சொன்னதாகச் சொல்லி அவாளைக் கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக இருக்கச் சொல்லிக் கேளுங்கோ”ன்னுட்டார். நீங்க தட்டிச் சொல்லாம ஒத்துக்கணும். இது எங்க எல்லாருடைய அபிப்பிராயம் மட்டுமில்லை. ஈசுவர கிருபையும் உங்களுக்கு இருக்கு” என்றார்கள் யாவரும்.

“எனக்கு, அத்தனை தகுதி ஏது?” என்று விநயமாகக் குழைந்தார் கமலக்கண்ணன்.

“அப்படியில்லை. இந்த விநயமே ஒரு பெரிய யோக்கியதைதான்” என்றார் வந்தவர்களில் சாதுரியமாகப் பேசத் தெரிந்த ஒருவர். ‘அதுக்கில்லே! நான் வியாபாரி. பல அலைச்சல் உள்ளவன். நினைச்சா டில்லி, கல்கத்தா, பம்பாய்னு பறந்துடுவேன்...”

“கண்டிப்பா நீங்கதான் இருக்கணும்னு பகவானே நியமிச்சுட்டார்...”

“மினிஸ்டர் கூட அபிப்ராயப்படறாராக்கும்...”

“ஆமாம்! அவாளே உங்களுக்கு ஃபோன் பண்ணாலும் பண்ணுவா...நீங்க மறுத்துச் சொல்லப்படாது...”