பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

53


ஆண்டுகளுக்குமுன் தேசிய உணர்வுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லை. அப்படி ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இன்று அவருக்கு ஏற்பட்டிருந்தது. அதேபோல் பக்தி பூஜை, புனஸ்காரத்திற்கு அரசியல் ரீதியாகவும், மனப்பான்மையின் படியும் அந்தக் குடும்பத்து முன் தலைமுறை ஆடவர்களிடம் இடமில்லை. இன்று பலரோடு பழகி ஒட்டிக் கொள்வதற்கு அதுவும் ஒரு தேவை ஆகிவிடவே அவரால் தவிர்க்க முடியவில்லை. சர். பட்டம்பெற்றவர்கள், ஜஸ்டிஸ் கட்சி ஜமீன்தார்கள், வெள்ளைக்கார கவர்னர்கள் தவிர வேறெவருடைய படங்களும் அந்த பங்களாவின் சுவர்களில் முன்பு இடம் பெற்றதே இல்லை. இப்போதோ காந்திபடமும்,நேருபடமும், பாரதியார் படமும் இடம் பெறுகிற நிர்ப்பந்தத்தைத் தவிர்க்க முடியவில்லை. இந்த மாறுதலுக்கு எல்லாம் வளைந்து கொடுத்துத்தான் தம்முடைய உள்ளத்தின் எதிர்கால ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்தார். பட்டம், பதவி, அதிகாரம் இவற்றையெல்லாம் அடைய ஆசைப்பட்டுத் தவிக்கும் காலங்களில் தன்மானம், தார்மீகக் கோபம் போன்றவற்றைக்கூட விட்டுவிட வேண்டும், அவற்றை எல்லாம் விடாமல் கட்டிக்கொண்டு பிடிவாதம் பிடித்தால் அடைய வேண்டியவற்றை அடைய முடியாமல் கூடப் போகும். அதனால் தான் மந்திரி விருத்தகிரீஸ்வரன்போனில் அப்படிப் பேசிய போது கூட அவரைவிடச் செல்வமுள்ளவராக இருந்தும், அதைத் தாங்கிக் கொண்டார் கமலக்கண்ணன். என்றாவது ஒருநாள் இப்படி மந்திரிகளை எல்லாம் அதிகாரம் செய்யும் இடத்துக்குகூடத் தான் வரமுடியும் என்ற நம்பிக்கை அவருள் இருக்கும்போது இதென்ன பெரிய விஷயம்? இன்று தன்னைத்தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை எல்லாம்தான் பழிவாங்குவதற்கு ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது இன்று இவ்வளவு பதவி இறுமாப்புடன் இருக்கும் இதே விருத்தகிரீசுவரன்

நெ–4