பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
56
நெஞ்சக்கனல்
 

வுடன் பலத்த கைதட்டல் எழுந்தது. உடனே அங்கே வந்திருந்த இன்னொரு தொழிலதிபர் கமலக்கண்ணனின் தொகையைவிட ஒர் ஆயிரம் ரூபாய் அதிகத் தொகை ஒன்றைத் தாம் அந்தத் திருப்பணி நிதிக்கு அளிப்பதாக அறிவித்தார். மந்திரி அந்தச் செய்தியையும் பலத்த கைத் தட்டலுக்கிடையில் வெளியிட்டபோது கமலக்கண்ணனின் முகத்திலே மலர்ச்சி குன்றியது போல் தெரிந்தது. அடுத்து வேறு இரண்டொருவரும் அதே கூட்டத்தில் திருப்பணிக்கான நன்கொடைத் தொகைகளை மந்திரி வாயால் வெளியிடுவதற்கென்றே சொல்லியதுபோல் அறிவித்தார்கள். முடிவில் நன்றிகூறியவர்– “நம் அமைச்சரவர்கள் கைராசிக்காரர். அவர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதற்கு இந்த விழாவை அவர் தொடங்கி வைத்ததிலிருந்து வந்து குவிந்த நன்கொடைகளே சாட்சி. நமது உபதலைவராகிய கமலக்கண்ணன் அவர்களின் குடும்பமோ பரம்பரையாகவே கைராசிக்காரக் குடும்பம். இந்தநிதிக்கு அவர் நன்கொடை கொடுத்திருப்பதே இது மேலும் மேலும் பெருகி வளரும் என்பதற்கு அடையாளம்”– என்று மீண்டும் தன் பெயரை நினைவூட்டியபோது கமலக்கண்ணனுக்குப் பெருமையாக இருந்தது. தன்பெயர் கூட்டத்தில் நினைவூட்டப்படாத போதெல்லாம் சோர்ந்திருந்த அவர், பெயர் நினைவூட்டப்பட்ட போதெல்லாம் பெரிதும் மகிழ்ச்சி கொண்டார். உள்ளமும் இனம் புரியாது குறுகுறுத்தது. கூட்ட முடிவில் மந்திரி வெளியில் வருகையில் மிகவும் நெருங்கி ஏதோ சொல்லிக்கொண்டு வருவது போல் கமலக்கண்ணனின் தோளில் கைபோட்டுத் தழுவிக் கொண்டாற்போல வந்தார். அந்த நிலையில் கோயிலிற் கூடியிருந்த எல்லார் கண்களும் கமலக்கண்ணனையே மதிப்புடன் நோக்கின. திருப்பணியின் செயற்குழுவில் இருந்த மற்ற பிரமுகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கமலக்கண்ணன் மேற்பொறாமையாகக் கூட இருந்தது. மந்திரி எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுப் போய் விட்டார். மற்றவர்கள் கமலக்கண்ணனைச் சூழ்ந்துகொண்டார்கள். எல்லா