பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
57
 

ருடனும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுக் கமலக்கண்ணனும் சிறிது நேரத்தில் வீடு திரும்பினார். அன்று மாலை சென்னையில் நுங்கம்பாக்கம் பகுதியில் முகாம் செய்திருந்த ஒருசமய ஆதீனகர்த்தரின் காரியஸ்தர் கமலக்கண்ணனுக்கு ஃபோன் செய்தார். கமலக்கண்ணனுக்கு முதலில் இது போன்றவர்களிடம் எப்படிப் பேசிச் சமாளிப்பது என்றே புரியவில்லை. “நீங்க கோயில் திருப்பணி வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதைப் பத்திச் சாயங்காலப் பேப்பரிலே பார்த்தோம். ஆதீனமே உங்களைப் பார்க்க ஆசைப்படுகிறது. நீங்க வந்து பார்த்தாச் சாமியே ரொம்பச் சந்தோசப்படுவாங்க”–என்றார் காரியஸ்தர் கமலக்கண்ணன் தயங்கினார். ஆதீன கர்த்தரே தன்னைப் பார்க்க விரும்புவது காரியஸ்தரின் பேச்சிலே தெரிந்திருந்தாலும் அதில் ஒரு வறட்டுக் கர்வமிருப்பதையும் அவர் உணர்ந்தார். ஆயினும் அவரால் அந்த அழைப்பை மறுக்க முடியவில்லை.

“நீயும் சாயங்காலம் என்கூட நுங்கம்பாக்கம் வரவேண்டியிருக்கும்”– என்று மனைவியிடம் வேண்டினார் அவர்.

“நான் கிளப்பிற்குப் போகணுமே?...” என்று முதலில் தயங்கினாற்போல இழுத்த அவள் அப்புறம் அவர்வற்புறுத்திய வேகத்தை மறுக்கமுடியாமல் இணங்கினாள். பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டபின் அவள் புறப்பட அதிக நேரமாயிற்று. அவர், பட்டு அதர வேஷ்டி, சில்க் ஜிப்பா விபூதிப்பூச்சு, இடுப்பில் பட்டுஅங்கவஸ்திரம் சகிதம் புறப் பட்டார். சாமியாரிடம் கொடுப்பதற்குத் தட்டு நிறைய ஆப்பிள், திராட்சை, மாதுளம் பழங்களை அழகாக அடுக்கிக் காரில் கொணர்ந்து வைத்திருந்தார் சமையற்காரர். இதுவரை அவரோ, அவருடைய நவநாகரிக மனைவியோ இப்படி ஒரு மடாதிபதியைத் தேடிச் சென்றதே இல்லை. ஆயினும் இதன் மூலமும் ஒரு சமூக கெளரவத்தைத் தேடிக் கொள்ள முடியும் என்பதைக் கமலக்கண்ணன் புரிந்து கொண்டிருந்தார். இந்த ஆதீன் கர்த்தருக்கு வேறு பல வியாபாரிகள், தொழிலதிபர்கள், வருமானவரி அதிகாரிகள்