பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
58
நெஞ்சக்கனல்
 


எல்லாரும் நெருங்கிய அன்பர்களாக இருப்பதை அவர் பலரிடம் கேள்விப்பட்டிருந்தார்.

ஆதீனகர்த்தரை அறிமுகம் செய்துகொள்வதாலும் பழகிக் கொள்வதாலும் தனக்கு இலாபமுண்டு என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். பக்தனாக இருப்பதைவிடப் பக்தனைப்போல் தன்னைக் காண்பித்துக் கொள்வது கூடப் பெரிய சமூக அந்தஸ்தை தரமுடியும் என்பதைப் பலருடைய வாழ்வில் அவர் காண முடிந்திருக்கிறது. அதனால் தான் மடத்துக் காரியதரிசி வலுவில் அழைத்தபோது அவரும் மறுக்காமல் புறப்பட்டு வந்திருந்தார்.

“மிஸஸ் சோமசுந்தரம் நேத்து லேடீஸ் கிளப்லே சொன்னாள், இந்தச் சாமிக்குச் ‘சித்து விளையாட்டு’ எல்லாம்கூட அத்துப்படியாம்”– என்று காரில்வரும்போது கூறினாள் அவர் மனைவி.

“சித்து விளையாட்டுன்னா...” என்று அவள் கூறியதைச் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமல் பதிலுக்கு அவளையே வினவினார் கமலக்கண்ணன். அவள் தனக்குத் தெரிந்த இரண்டொன்றை விவரித்துக் கூறத் தொடங்கினாள். அதற்குள் கார் சுவாமிகள் தங்கியிருந்த மடத்து வாசலுக்கு வந்து நின்றுவிட்டது. காரியஸ்தர் ருத்ராட் சதாரியாக ஓடோடி வந்து கார்க்கதவை திறந்துவிட்டு அவர்களை வரவேற்றார்.

“சாமி இப்பத்தான் என்னைக் கூப்பிட்டு நீங்க வந்தாச்சான்னு கேட்டாங்க”–என்றார் அவர்.

“அஞ்சு மணிக்கே புறப்படனும்னு நினைச்சோம். இவதான் வீட்டிலே விளக்கேத்தாமப் புறப்படமாட்டேன்னிட்டா...”– என்று மனைவியைச் சார்ந்து புளுகித் தள்ளினார் கமலக்கண்ணன்.

பின்னாலேயே டிரைவர் வர்ணபூர்வமாக அடுக்கப்பட்டிருந்த பழத்தட்டை எடுத்துக்கொண்டு வந்தான் காரியஸ்தர்யாரோ கண்பார்வை குன்றியவர்களுக்கு ஒவ்வொரு படியாகச் சுட்டிக்காட்டி அழைத்துப் போவதைப்போல அவர்களுக்குத் தம் கையால் கீழே ஒவ்வொரு படியாய்க் காட்டிப் பவ்யமாக உள்ளே அழைத்துக்கொண்டு போனார்.