பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

நெஞ்சக்கனல்


வதற்கு முன் இந்தியாவையே சரியாகப் பாராத இந்தியன் ஒவ்வொருவனும் சுதந்திரம் அடைந்த பின்போ தன் தாய் நாட்டை முழுமையாகப் பார்க்காவிட்டாலும் அந்நிய நாடுகளைப் பார்ப்பதில் தவிப்புக் கொண்டிருக்கிற நிலைமைக்கு ஓர் உதாரணமாகவே கமலக்கண்ணனும் இருந்தார். சோதிடர் எதையும் விடவில்லை. எல்லாவற்றிற்கும் பொறுமையாக மறுமொழி கூறினார்.

“ஜீவிய காலத்திலே நீங்க மகாயோகவானாக இருக்கறத்துக்கான எல்லா அம்சமும் இருக்கு”– என்று கூறிக் கொண்டே வந்தவர். குரலை மெதுவாக்கி, கொஞ்சம்விஷம்மும் கலந்த குரலில், “இன்னும் கொஞ்ச நாளிலேஸ் திரிவசியமும் உங்களுக்குக் கைகூடும். மகா ஸெளந்தரியவதியான சில ஸ்திரிகள் உங்க மேலே பிரியப்படுவா...”– என்று கூறிய படியே புன்முறுவல் பூத்தார். கமலக்கண்ணனுக்கே இதைக் கேட்க மகிழ்ச்சிக் குறுகுறுப்பு இருந்தாலும், “இரைந்து சொல்லாதிங்க...என் சம்சாரம் உண்ணா விரதம் இருக்கக் கிளம்பிடப்போறா”– என்று ஒப்புக்கு ஏதோ நகைச்சுவை போல் மறுமொழி கூறினார். பணக்காரனுக்குச் சோதிடம் கூற வருகிறவன் அவனுடைய ஜாதகம் கூறுவதைவிட மனம் கூறுவதற்கேற்பவே அதிகமாகப் பலன்கள் கூற வேண்டியிருப்பதைப் புரிந்துகொண்டவர் போல் பேசினார் அந்த சோதிடர். அவர் பல ஜமீன்தார்களுக்கும், மிராசுதார்களுக்கும் பல முறை சோதிடம் கூறிய அனுபவத்தில், ‘எவ்வளவு பணம் சேரும், எவ்வளவு பெண்கள் சேர்வார்கள்’– என்பதையே அவர்கள் அறிய விரும்பித் தவிப்பார்கள்– என்பதை நன்றாகப் புரிந்துகொண்டவராக இருந்தார் அவர்.

“அது சரி! ஏதே மந்திரியா வருவேன்னிங்களே! என்ன மாதிரி? எப்போ? எவ்வளவு காலம்? எல்லாம் விவரமாச் சொல்லுங்களேன்...” என்று அவரை அனுப்பவே மனமில்லாமல் தூண்டித் தூண்டிக் கேட்டார் கமலக்கண்ணன்.

“சீக்கிரமே வருவீங்க; சந்திரதசை குருபுத்திமுடியறதுக்குள்ளே நடக்கத்தான் போகுது! நான் சொல்லலே, ஜாதகமே தெளிவாச் சொல்றது. பார்த்துண்டே இருங்கோ...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/66&oldid=1047541" இலிருந்து மீள்விக்கப்பட்டது