பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
66
நெஞ்சக்கனல்
 

கிடப்படாது, எதிலிருந்தும் ஒதுங்கிடவும் கூடாது”– என்றார் அவர்.

“அது சரி! ஆனா நீங்க சொல்றதைவிட நல்ல காரியம் – பப்ளிக் ரிலேஷனுக்காக நீங்களே ஒரு டெய்லி நியூஸ் பேப்பர் நடத்தறதுதான். உங்களுக்கு அதை ஸஜ்ஜஸ்ட் பண்ணணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை மிஸ்டர் கமலக்கண்ணன்! நம்ம நியூஸ் எல்லாம் போட்டுக்கலாம் கிறதைத்தவிர– நம்ம சொந்தக் கம்பெனிகளோட விளம்பரங்களைக்கூட அதிலே போட்டுக்க முடியும். ஒரு நல்ல டெய்லிநியூஸ் பேப்பராலே லட்சக்கணக்கில் மக்கள் ஆதரவைத் திரட்டறது சுலபம். நீங்க மனசுவச்சா இது முடியும்”–– என்றார் அவர் நண்பர்களில் ஒருவரான மற்றொரு பணக்காரத் தொழிலதிபர். கொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில், “ஜாயிண்ட் வென்ச்சராகூடத் தொடங்கலாம்”– என்று தாமும் துணை செய்வதாக வாக்களித்தார் அந்த நண்பர். கமலக்கண்ணனுக்குச் சபலம் தட்டியது. உடனே கிளப்பிலேயே நண்பர்களாக உட்கார்ந்து ஒரு திட்டம் போடத் தொடங்கினார்கள். பேப்பர் கோட்டா எவ்வளவு தேவை? எஸ்டாபிளிஷ்மெண்ட் செலவு என்ன ஆகும்? விளம்பர வருமானம் எவ்வளவு இருக்கும்? ஆரம்ப காலத்தில் எவ்வளவு நஷ்டம் வரும்; போகப்போக எப்படி இலாபகரமாக மாறும்? என்பதையெல்லாம் திட்டமிட்டு, விவாதித்தார்கள். அந்தப் பேச்சும், யோசனையும் கமலக்கண்ணன் மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்கி விட்டன. சோதிடர் சொல்லிவிட்டுப் போயிருந்த ராஜயோக காலம் நெருங்கி வருவதற்கு அறிகுறியாகவே இத்தகைய திட்டங்கள் தமக்குத் தென்படுவதாக அவர் எண்ணத் தொடங்கிவிட்டார். அந்தப் பிரமையே– அந்த மயக்கமே–அந்தப் போதையே ஓர் இலட்சியமாகிக் கனலத் தொடங்கி விட்டது அவருள். ஒரு தினசரிப் பத்திரிகை தனக்கே சொந்தமாக அவசியமென்று தீவிரமாக நினைக்கலானார் அவர். அந்த நினைவே ஒரு தவிப்பாகவும் ஆகிவிட்டது சிறிது நேரத்தில்.