பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
77
 


நான் ஒண்ணுமே சொல்ல வேண்டியதில்லையா?” என்று கமலக்கண்ணன் வினவினார்.

“முதல்லே இதைப் படியுங்க! எல்லாம் கச்சிதமா இருக்கும். நீங்களே அசந்து பூடுவிங்க...”

கமலக்கண்ணன் கலைச்செழியனின் கையெழுத்துப் பிரதியைப் படிக்கத் தொடங்கினார். படித்துக்கொண்டே வந்தவர், “எனக்கு வீணை வாசிக்கறதிலே ரொம்பப் பிரியமும், திறமையும், பழக்கமும் உண்டுன்னு எழுதியிருக்கீங்களே...?” என்று தயங்கிய குரலில் கேட்டார்.

“அதெல்லாம் பரவாயில்லே சார்!சும்மா இருக்கட்டும் நான் பார்த்துக்கறேன். எத்தனை சங்கீத சபைகள்லே தலைவராகவும் உபதலைவராகவும், மெம்பராகவும் இருக்கீங்க... சும்மா அதோட சம்பந்தப்படுத்தி ஏதாச்சும் போடாட்டி நல்லாருக்காது பாருங்க...உங்க வீட்டிலே குழந்தைங்க யாராவது வீணை படிப்பாங்களே! இல்லியா...? அதிலே ஒரு வீணையைத் தூக்கி வச்சிட்டுச் சும்மா உக்காருங்க... ஒரு படத்தைத் தட்டிக்கிறேன் அசல் வீணை வித்வான் தோற்றுப் போகிற மாதிரிப் பண்ணிடமாட்டேன்– ”என்று அட்டகாசமாக ஒரு போடு போட்டான் கலைச்செழியன்.

“அப்போ குட்டி நடிகை எவர் ஸில்வர் அரிவாள் மணையில் காய்கறி நறுக்கற மாதிரித்தான் இதுவும்னு சொல்லுங்க...” என்று கமலக்கண்ணன் கலைச்செழியன்ன ஹாஸ்யத்துக்கு இழுத்தார்.

கலைச்செழியன் அதைக் கேட்டு அசடுவழியப் புன்முறுவல் பூத்தான்.

“மத்ததெல்லாம் சரியாகவே இருக்கு. நான் டெய்லி ஸ்டார்ட் பண்றதைப் பத்திக்கூட எழுதிட்டீங்க என்னைப் பத்தித்தான் ரொம்ப அதிகமாகத் தூக்கிவச்சு எழுதியிருக்கீங்க. அது உங்க அன்பைக் காட்டுது...”

“அதென்ன ஒருத்தர் சொல்லியா தெரியணும்? நம்ம கலைச்செழியன் சார் மனசு வச்சிட்டார்னா எல்லாம் பிரமாதமாப் பண்ணிப்பிடுவாரு இன்னிக்கி நேத்திக்கிப் பழக்கமா? பத்துவருஷமா நானும் இவரும் பழகுகிறோம்.