பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.82

நெஞ்சக்கனல்


“பின்னே சும்மாவா சொல்றேன் நான்...பழகினா நீங்களே கூட அதுங்குணத்தைப் புரிஞ்சுக்குவீங்க... அப்புறம் நான் சொல்ல வேணாம்...” என்று மறுபடி ஒத்துப் பாடினார் பிரகாசம். உலகில் மாயா உட்பட சகல விஷயங்களையும் விளம்பரம் செய்வதும் விற்பனையை வளர்ப்பதும் தான் அவருடைய இலட்சியங்களாயிற்றே.

பப்ளிஸிட்டி சம்பந்தமாக க்ளையண்ட்களை--- வாடிக்கைக்காரர்களை– இப்படி ‘மாயா’ விநோதங்கள் மூலமாக வலை விரித்துப் பிடிப்பது தான் பெரும்பாலும் அவர் வழக்கம். இந்த வலைகளுக்குத் தப்பியவர்கள் பெரும்பாலும் எந்த வலையிலுமே சிக்க முடியாதவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதும் அவருடைய திட சித்தாந்தமாக இருந்தது.

சிறிது நேரம் கமலக்கண்ணனிடம் புது நடிகை மாயா வைப்பற்றிப் பேசி அவருக்குச் சரியானபடி மயக்கமூட்டி விட்டபின் பிரகாசமும், கலைச்செழியனும் விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உடை மாற்றிக்கொண்டு கமலக்கண்ணனும் கிளப்புக்குப் புறப்பட்டுவிட்டார். புறப்படு முன் மறக்காமல் அலுவலகத்திற்குப் போன் செய்து பத்திரிகைக்குப் பெயர் வைப்பது சம்பந்தமாக யோசனை கூறி வந்திருந்த கடிதங்களைக் கிளப்பிற்கு எடுத்து வருமாறு தன் காரியதரிசிக்குத் தெரிவித்திருந்தார் அவர். கிளப்பில் எட்டரை மணிவரை சீட்டாடிய பின் நண்பர்களில் முக்கியமானவர்களோடு பத்திரிகைப் பெயர் சம்பந்தமான ஆலோசனை தொடங்கப்பட்டது. கடிதங்களில் வந்திருந்த பெயர்கள் யாருக்குமே பிடிக்கவில்லை.

“சாயங்காலம் வீட்டுக்கு -- பிரகாஷ் பப்ளிஸிட்டி பிரகாசம்னு ஒரு ஆளு வந்திருந்தார். ‘தினக்குரல்’னு பேர் வைக்கலாமின்னு அந்த ஆள் சொன்னாரு” என்று கமலக்கண்ணன் தற்செயலாகக் கூறியபோது அந்தப் பெயரை எல்லா நண்பர்களுமே சொல்லி வைத்தாற்போல் ஏகமனதாக ஆதரித்தார்கள். அந்தப் பெயரையே வைப்பதென்று, கமலக்கண்ணனும் முடிவு செய்தார்.