பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
85
 

வில்லை. பத்துப் பேருக்கு, ‘நான் பக்தி செய்கிறேன்’– என்று விளம்பரப் படுத்திவிட்டுப் பக்தி செய்தால்தான் இந்தக் காலத்தில் மதிப்பு என்பதைப் புரிந்து கொண்டவர் கமலக்கண்ணன்.

மடாதிபதி விஜயம் அவருடைய பங்களாவில் திருவிழாவாக வந்து போயிற்று. போட்டோக்கள், பந்தி பந்தியாய் அன்னதானம், வாசலில் பந்தல் என்று தடபுடல் பட்டது. சுவாமிகள் கமலக்கண்ணனின் பங்களா காம்பவுண்டில் மண், பொன், பெண் ஆகியவற்றின் நிலையாமைகளைப் பற்றிப் பிரசங்கங்கள் செய்தார். தினம் ஐநூறுபேர் கூடிக் கேட்டார்கள். மூன்றுநாள் இப்படி நடந்தது. நாலாவது நாள் வேறொரு பெரியமனிதர் வீட்டுக்குப் போய்விட்டார் சுவாமிகள். கமலக்கண்ணனுடைய பங்களா முகப்பில் பந்தல், வாழைமர அலங்காரங்களைப் பிரிக்க வேண்டியதாயிற்று.

ஆதினத்துச் சாமிகள் விஜயம் செய்து முடித்தபின் பிரகாசமும், கலைச்செழியனும் மறுபடி வந்து மாயா தேவியைப்பற்றி நினைவூட்டினர்.

“இப்பவே மாயாவைப் பார்த்துவச்சால் அப்புறம் ஒரு செளகரியம் இருக்குங்க, நம்ம ‘தினக்குரல்’ தொடக்க விழாவில் முதல்நாள் பேப்பர் முதல் பிரதியை வெளியிட ஒரு விழா ஏற்பாடு செய்து மாயாவையே முதல் பிரதியை வாங்கச் சொல்லலாம். அப்படிச் செய்தால் நல்ல ‘பப்ளிஸிடி’ ஆகும். முதல் பிரதியை மாயா வாங்கின செய்தி ஊரெல்லாம் பரபரப்பாகப்பரவும். அது பத்திரிகை விற்பனைக்குத் துணை செய்யக்கூடியது” -- என்று பிரகாசம் யோசனை கூறியபோது, “நல்ல ஐடியாங்க -- இவரு சொல்றது”– எனக் கலைச்செழியனும் சேர்ந்துகொண்டான்.

“டெய்லி பேப்பருக்கு இப்படி ஒரு விழா எல்லாம் அவசியமில்லேன்னு நினைக்கிறேன்”–

“அப்படிச் சொல்லாதீங்க டெய்லிக்குத்தான் இது ரொம்ப அவசியம்...”– என்று கமலக்கண்ணனிடம் மேலும் வற்புறுத்தினார் பிரகாசம்.

 

நெ – 6