பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

97


விட்டேன். அப்புறம் உங்கள் விருப்பம்”—என்று எதிர்ப்புறம் டெலிபோனை வைத்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணன் ஊழியர் கூட்டத்திற்கு வருவதே இரசாபாசமாக முடிந்துவிடும் என்று கருதிப் பயந்துதான் அவருக்குக் குறிப்பாக அறிவித்தார் கட்சித்தலைவர். கமலக்கண்ணனோ அதைப் புரிந்துகொள்ளாமல் கூட்டத்திற்குத் தானும் வரப்போவதாக அறிவித்துவிட்டார்.

ஊழியர் கூட்டம் தொடங்கியபோது பரபரப்பாக இருந்தது. கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது விரும் பத்தகாத ஒருவித மெளனம் அங்கே நிலவியது. கட்சித் தலைவர் தான் அவரை வரவேற்று உட்காரச்சொன்னாரே ஒழிய வேறு யாரும் பேசவே இல்லை. ‘வாருங்கள்’ என்று கூப்பிடவோ, கமலக்கண்ணன் உள்ளே நுழைந்தபோது, எழுந்து நின்று மரியாதை செய்யவோ யாருமே தயாராக இல்லை அங்கே.

“இந்தக் கூட்டம் ஊழியர்களின் மனக்குறைகளை அறிவதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் கட்சியில் தமக்குள்ள உரிமையைப் பாராட்டித் தாராளமாகப் பேசலாம்”— என்று தலைவர் அறிவித்ததும் ஒர் ஊழியர் ஆத்திரத்தோடு துள்ளி எழுந்தார்.

“கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூடச் சேர்க்கப்படுகிறார்கள், ‘சினிமா’ டிக்கெட் விற்கப்படுவது. போல் கட்சி உறுப்பினர் டிக்கெட்டுகளும் விற்கப்படுகின்றனவா? என்பது தெரியவேண்டும்”–எனக் கேட்டார் அந்த ஊழியர். “உறுப்பினர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் கொள்கை ரீதியான தகுதிகள் இல்லாதவர்களைக்கூட உறுப்பினர்களாகச் சேர்த்து வருவதைப் பார்க்கிறோம். இப்படி நிகழ்ச்சிகள் சமீபகாலத்தில் கட்சியில் அதிகமாகி இருக்கின்றன என்று தோன்றுகிறது” என்றார் மற்றொரு உறுப்பினர். கட்சித் தலைவர் மறுமொழி கூற முடியாமல் விழித்தார்.