உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


பம்பாய் பிரீபிரஸ் ஜர்னலின் ஆசிரியராயிருந்து மிகத்திறமையாக நடத்திப் பெயர் பெற்றவரும், பம்பாய் காங்கிரஸ் இயக்கத்தை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவருட தண்டனை யடைந்தவருமான நண்பர் கே. சீனிவாசன் சென்ற மாதம் 22௳ நாசிக் சிறையிலிருந்து விடுதலையடைந்து விட்டார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டும்மென்று ஆர்வங்கொண்ட தமிழ் மணிகளில் அவர் ஒருவர். அவர் ஜெயிலுக்குப் போகுமுன்பே, விடுதலையடைந்ததும் இந்தத் துறையில் வேலை செய்யவேண்டுமென்று கடலூர் ஜெயிலில் என்னைக் கண்டு சொல்லிப்போனார். அந்த மாதிரியே இப்பொழுது செய்ய விரும்புவதாக டெல்லியிலிருந்து கடிதம் எழுதியிருக்கிறார். இதைத் தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் என்று கருதுகிறேன்.

நண்பர் வ. ராமசாமி ஐயங்கார் பகலிலும் இரவிலும் இலக்கியத்தைப் பற்றியே பேசுகிறார். சுவாசம் விடும் போதும் இலக்கியந்தான். இலக்கிய சுவாசத்தையே ஜீவனாகக் கருதித் துள்ளி ஓடுகிறார். சென்னையில் அவர் வந்து இருந்துகொண்டு வாலிபத் தமிழருக்கு இலக்கிய “இஞ்சக்‌ஷன்” செய்த வண்ணமா யிருக்கிறார். சீனிவாசன் வரவும், ஐயங்கார் “இஞ்சக்‌ஷனும்” இலக்கிய சூரியன் உதயமாகும் அறிகுறிகளோ என்று ஆனந்த மடைகிறேன். தமிழரே, இதுவரை தூங்கியது போதும். இனியாவது விழியுங்கள். மற்ற பாஷைகள் எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின்றன என்பதைச் சிந்தியுங்கள்.

சீக்கிரமாகத் தமிழ்வளர்ச்சியில் சிரத்தை கொண்டவர்கள் கூடி யோசித்து, தீவிரமாக வேலை ஆரம்பிக்க முயற்சி நடக்கிறது. கடலூர் ஜெயிலில் கையெழுத்திட்ட நண்பர்களும், ஆவல்கொண்ட மற்றவர்களும் உடனே தங்கள் அபிப்பிராயங்களை எனக்கு எழுதும்படி பணிவுடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.

டி. எஸ். சொக்கலிங்கம்.

(9–7–1933)