பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வெள்ளை அரசு ‘இன ஒதுக்கல்’ கொள்கையைப் புகுத்தியது. அதனால் ஆப்பிரிக்க நாட்டின் கறுப்பின மக்களும், இனக்கலப்பில் பிறந்த ஆசிய நிறத்தவரும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.

ஆப்பிரிக்கர், அவர்களது சொந்த நாட்டில், ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் சுதந்திரமாகச் செல்ல முடியாது. அப்படிப் போவதற்கு வெள்ளை முதலாளிகளின் அனுமதி பெற்றாக வேண்டும். அதற்கென வழங்கப்படும் ‘கடவுச்சீட்டு’ (பாஸ்) வைத்திருக்க வேண்டும். கல்விகற்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. வாக்குரிமை, கல்வி, பதவி, அதிகாரம் எல்லாம் வெள்ளை நிறத்தவருக்கு மட்டுமே உரியனவாகும்.

இவ்விதம் இழிவுற்ற ஆப்பிரிக்க மக்களின் தன்மானத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத் தலைவர்கள் தோன்றினார்கள். தனி இயக்கம் அமைத்தார்கள். அமைதி வழியில் போராட்டங்கள் நடத்தினார்கள். மனு, தந்தி, முறையீடு என்ற முறையில் அப்போராட்டங்கள் இருந்தன.

இப் போராட்டங்களைத் தென் ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் என்ற அமைப்பு நடத்தி வந்தது. ஆல்பர்ட் லிதுலி என்பவர் அதன் தலைவர். அவர், இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். அமைதி முறையில் ஆர்ப்பாட்டம், சட்ட மறுப்பு, ஒத்துழையாமை என்று தென்ஆப்பிரிக்க விடுதலைப் போருக்கு உயிர்ப்பூட்டி வந்தார்.

அதற்கு விளைவு இல்லாமல் போகவில்லை. ஐக்கிய நாடுகள் பேரவை 1960 ஆம் ஆண்டை ‘ஆப்பிரிக்க ஆண்டு’ என அறிவித்தது. தென் ஆப்பிரிக்க விடுதலை குறித்த உலக நாடுகளின் அக்கறையை இவ் அறிவிப்பு வெளிப்படுத்தியது.

1961 மே மாதம் தென் ஆப்பிரிக்கா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆயினும் பழைய நிலையே தான் நீடித்தது. இனவேறுபாடற்ற மக்கள் குடியரசாக அது இருக்கவில்லை. வெள்ளையர்கள் சுரங்க முதலாளிகளாக நகரங்களில் வசித்தார்கள். கறுப்பின


வல்லிக்கண்ணன் • 11