பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதன் பயனாக இளைஞர் அணித் தலைவர்கள் இரண்டு பேர் தேசியச்செயற்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். ஆன்டன் லெம்பிடே அவர்களில் ஒருவர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இளைஞர் அணித் தலைவர்களில் மற்றுமொருவரும் தேசியச் செயற்குழுவின் உறுப்பினரானார்.

கால ஓட்டத்தில் தேசிய காங்கிரஸ் சில வெற்றிகளைப் பெறமுடிந்தது. 1948இல் வெள்ளையர் நடத்திய தேர்தலில் தேசியக் கட்சி வென்றது. இளைஞர் அணியின் செயல் முறைகளே அதற்கு உதவி புரிந்தன. எனவே, 1949இல் நடைபெற்ற மாநாட்டில், இன ஒதுக்கல் கொள்கையை முறியடிப்பதற்காக, இளைஞர் அணியினர் தனிப்பட்ட திட்டம் ஒன்றை முன் வைத்தனர்.

மறியல், வேலை நிறுத்தம், அமைதியான முறையில் எதிர்ப்புக் காட்டுதல், ஒத்துழையாமை ஆகியவற்றைப் போராட்ட ஆயுதங்களாகக் கைக்கொள்ள வேண்டும் என்று அவர்களை வலியுறுத்தினார்கள். இத்திட்டம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் அதிகார பூர்வமான கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காங்கிரசின் இளைஞர் அணியைச் சேர்ந்த உபகுழுவினரால் இச்செயல் திட்டம் தீட்டப்பெற்றது. நெல்சன் மண்டேலாவும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார்.

தங்கள் திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்துவதற்குத் தேவையான மாற்றங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பெற்றன. முதியவர்களாகிவிட்ட தலைவர்கள் நீக்கப்பட்டார்கள். அவர்களுக்குப் பதிலாக உற்சாகமுள்ள இளைஞர்கள் இடம் பெற்றார்கள்.

இளைஞர் அணியை அமைப்பதற்குக் காரணமாக இருந்த முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் பொதுக் காரியதரிசி ஆக நியமிக்கப்பட்டார். மிதவாதப் போக்குடைய ஒருவர் அதுவரை கட்சித் தலைவராக இருந்தார். அவர் இடத்தைப் போர்க்குணம்


வல்லிக்கண்ணன் • 17