பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதிகம் பெற்றிருந்த டாக்டர் ஜே.எஸ். மொரோகா பிடித்துக் கொண்டார்.

1950ஆம் ஆண்டு கூடிய தேசிய மாநாட்டில் மண்டேலா தேசியச் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்துத் தென் ஆப்பிரிக்க மக்களுக்கும் பூரணமான குடி உரிமை வழங்கப்பட வேண்டும்; பார்லிமெண்டில் தென் ஆப்பிரிக்கர்களுக்கு நேரடிப் பிரதிநிதித்துவம் வேண்டும்.

இக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் செயல் திட்டத்தை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இளைஞர் அணி வகுத்துக் கொண்டது. இச்செயல்திட்டத்தைத் தயாரிப்பதில் நெல்சன் மண்டேலா முக்கியப் பங்கு வகித்திருந்தார்.

நிலத்தை மக்களிடையே மறுபங்கீடு செய்வது, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமைகள், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய விஷயங்களில் இளைஞர் அணியினர் தீவிர கவனம் செலுத்தினார்கள்.

நாட்டின் குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாகவும் கட்டாயமாகவும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். வயது வந்தவர்களும் முதியோரும் அவசியம் கல்விப் பயிற்சி பெற வேண்டும் என்றும் அணியினர் கருதினர்.

நாட்டில் நீடித்த அநியாயமான சட்டங்களை எதிர்க்கும் கிளர்ச்சியைத் தேசிய காங்கிரஸ் 1952 இல் தொடங்கியது. அப்போது தேசியத் தொண்டர் படைத்தலைவராக மண்டேலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த எதிர்ப்புக் கிளர்ச்சி மக்களின் இயக்கமாகச் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது கட்சியினரின் நோக்கமாக இருந்தது. தேர்ந்தெடுக்கப் பெற்ற தொண்டர்களால் தொடங்கப் பெறும் செயல்முறை, மக்களின் மொத்தமான ஆதரவு பெற்ற, அமைதியாக எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் நடவடிக்கையாக வளர்ந்து பெருக வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.


18 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா