பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொண்டர் படைத் தலைவர் என்ற முறையில் மண்டேலா தனது கடமையைச் செய்வதற்காக நாடு நெடுகிலும் பயணம் செய்தார். நீதிமுறையற்ற சட்டங்களை எதிர்த்துப் பிரசாரம் புரிந்தார்.

எதிர்ப்புக் குரல் கொடுப்பதற்கு மக்களைத் திரட்டினார். அமைதியான முறையில் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்பதில் அவர் கருத்தாக இருந்தார்.

ஆயினும் ஆட்சியினர் மண்டேலாவையும், அவரது சகா ஒருவரையும் குற்றம் சாட்டிக் கைது செய்தனர். விசாரணை நடத்தினர். மண்டேலாவும் அவரது சகாவும் எப்போதும் அமைதியாகச் செயல்புரியும்படியே தங்கள் தொண்டர்களுக்கு வழிகாட்டி வந்தனர்; வன்முறைச்செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிப்பாகக் கூறியுள்ளனர். இந்த உண்மை விசாரணையின் போது தெளிவாக வெளிப்பட்டது.

இருப்பினும், கம்யூனிசத்தை அடக்கி ஒடுக்கும் சட்டத்தை எதிர்ப்பதில் அவர் தீவிரமுனைப்புக் காட்டினார் என்ற குற்றத்துக்காக மண்டேலாவுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

விரைவிலேயே எதிர்ப்பு இயக்கம் முடிவு பெற்றது. சிறைத் தண்டனை மாற்றப்பட்டது. மண்டேலா எவ்விதமான கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டார். மேலும் ஆறு மாத காலத்துக்கு அவர் ஜோகன்னஸ்பர்க் நகரை விட்டு வெளியே எங்கும் போகக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.

இந்தக் கட்டுப்பாட்டை மண்டேலா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். வக்கீல் தொழிற்பயிற்சிக்கான தேர்வை அவர் எழுதி முடித்தார். வக்கீலாகத் தொழில் புரிவதற்குரிய அனுமதியும் பெற்றார்.

அவர் ஜோகன்னஸ்பர்க்கில், ஆலிவர் டாம்போ என்பவருடன் கூட்டுச் சேர்ந்து, வக்கீல் தொழில் புரிவதில் ஈடுபட்டார்.


வல்லிக்கண்ணன் • 19