பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது மண்டேலா ஆற்றிய இணையற்ற சேவைகளுக்கு உரிய பலன் அவருக்குக் கிட்டியது. காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

1952 இறுதியில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் டிரான்ஸ்வால் வட்டாரத் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இதன் மூலம் தேசிய காங்கிரசின் ஒரு உபதலைவராகவும் ஆனார் அவர்.

வழக்கறிஞர் என்ற தன்மையிலும் நெல்சன் மண்டேலாவும், அவரது கூட்டாளியான ஆலிவர் டாம்போவும் மக்களின் வாழ்க்கைத் துயரங்களை அனுபவ பூர்வமாக நன்கு அறிந்தார்கள். நாள்தோறும் அவர்கள் அலுவலகத்தில் பெரும் கூட்டமாகப் பாதிக்கப்பட்ட மக்கள் திரண்டு வந்து காத்திருந்தார்கள். அரசாங்கத்தின் இன ஒதுக்கல் கொள்கையால் மிகுந்த கொடுமைகளுக்கு ஆளானவர்கள் அவர்கள்.

தென் ஆப்பிரிக்காவில் சொந்த நிலம் இல்லாமல் இருப்பது ஒரு குற்றமாகக் கருதப்பட்டது. தலைமுறை தலைமுறையாகக் குடும்பங்கள் தங்களுக்கென்று சிறுதுண்டு நிலம் வைத்திருந்தார்கள்.

அதில் உழைத்துப் பாடுபட்டு வாழ்ந்தார்கள். இன ஒதுக்கல் அவர்களது நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக் கொண்டது. அதை எதிர்த்து வழக்காடுவதற்காக அவர்கள் வழக்கறிஞர்களை நாடினார்கள்.

அவரவர் சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் வேறு எங்காவது தங்க வேண்டியிருந்தது. அப்போது உரிமை இல்லாத இடத்தில் அவர்கள் தங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டார்கள். அதை எதிர்த்து வாதாடுவதற்காகவும் மக்கள் வழக்கறிஞர்களைத் தேடி வந்தார்கள்.

அந்தக் காலகட்டத்தில் மண்டேலாவும் அவரது சகாவான ஆலிவர் டாம்போவும் இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்துப் போராடுவோராக இருக்கவில்லை. வழக்கறிஞர்கள் என்ற


20 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா