பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொழில் முறையிலேயே அவர்கள் மக்களுக்கு உதவிக் கொண்டிருந்தார்கள். அவர்களது உதவியை நாடி வந்த மக்களின் துயரக் கதைகள் வழக்கறிஞர்களின் உள்ளத்தைத் தொட்டன; அவர்களுக்கு உணர்வு விழிப்பு ஏற்படுத்தின.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளும், சிறைகளில் அவர்கள் சந்தித்து உரையாடிய வாதிகளின் அனுபவங்களும், ஆப்பிரிக்க மக்கள் எவ்வளவு துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள் என்பதையும், சொந்த நாட்டில் அவர்கள் எத்தகைய அவமானங்களுக்கெல்லாம் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதையும் உணரச்செய்தன.

தொழில் ரீதியில் சமூகத்தில் மண்டேலா, டாம்போ இருவரது அந்தஸ்து உயர்ந்திருந்தது. ஆயினும் இத் தொழில் அந்தஸ்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடியதாக இல்லை. கொடுமையான இன ஒதுக்கல் கொள்கை அவர்களையும் தாக்கியது.

அவர்கள் நகர எல்லையினுள் இருந்து தொழில் நடத்தக் கூடாது என்று சட்டம் அவர்களை விரட்டியது. நகருக்கு வெளியே வெகு தொலைவுக்கு அப்பால் அவர்கள் போய்விட வேண்டும் என்று அதிகார வர்க்கம் ஆணையிட்டது.

அதாவது, வேலை நேரத்தில் மக்கள் வழக்கறிஞர்களை அணுக முடியாத அளவு தூரத்தில் அவர்கள் வசிக்க வேண்டும் என்று வழிகாட்டப்பட்டது. அது அவர்களது வாதிடும் தொழிலை விட்டு விட வேண்டும், நாட்டின் மக்களுக்குச் சட்ட ஆலோசனையும் உதவியும் வழங்குவதை நிறுத்தி விட வேண்டும் என்று வற்புறுத்தும் செயலே ஆகும். எந்த வழக்கறிஞரும் இத்தகைய ஒடுக்கு முறையை ஏற்றுக் கொள்ள இணங்கமாட்டார்தான். மண்டேலாவும் டாம்போவும் இந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர். எதிர்த்துப் போராடவே முன்வந்தார்கள்.

மண்டேலாவின் வழக்கறிஞர் தொழிலுக்கு அரசாங்கம் மட்டும்தான் இடைஞ்சல் தர முனைந்தது என்றில்லை.


வல்லிக்கண்ணன் • 21