பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவித்தார். வெள்ளையர் கூடிய சட்ட சபையில், மக்களின் பிரதிநிதியாகத் தான் அங்கம் வகிக்காத பார்லிமென்டில், நிறைவேற்றப்பட்ட சட்டங்களை மதித்து அவற்றுக்குக் கீழ் படிய வேண்டிய கடமை எதுவும் தனக்குக் கிடையாது என்றும் அவர் கூறினார்.

‘இன வாதத்தை நான் வெறுக்கிறேன். அது கறுப்பு மனிதரிடமிருந்து தோன்றினாலும் சரி, வெள்ளை நிற மனிதரிடமிருந்து எழுந்தாலும் சரியே, இனவாதம் காட்டு மிராண்டித்தனமானதே’ என்று மண்டேலா முழக்கமிட்டார்.

நீதிமுறைப்படி மண்டேலா குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ஐந்து ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப் பெற்றது.

அந்தத் தண்டனையை அவர் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில், ரிவோனியா நியாய விசாரணை நடைபெற்றது. ரகசியமாக நாசவேலையில் அவர் ஈடுபட்டிருந்தார் என்று மண்டேலா மீது குற்றம் சாட்டப்பட்டது. அவ்விசாரணைகளின் போது மண்டேலாவே நீதிமன்றத்தில் எதிர்வாதம் செய்தார். அவர் நிகழ்த்திய வாதங்கள் அனைத்தும், இன ஒதுக்கல் கொள்கையை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் வரலாற்றில் உயர்ந்த இலக்கியப் பதிவுகளாக இடம் பெறத்தக்கவையாக அமைந்திருந்தன.

‘நான் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடியிருக்கிறேன். கறுப்பர் ஆதிக்கத்தையும் எதிர்த்து நான் போராடியுள்ளேன். ஜனநாயக ரீதியான சுதந்திர சமூகம் என்ற லட்சியத்தையே நான் போற்றி வருகிறேன். அந்த சமூகத்தில் சகல மனிதர்களும் ஒற்றுமையோடு அமைதியாகவும் சமவாய்ப்புகளுடனும் வாழ்க்கை நடத்துவார்கள். அத்தகைய லட்சியத்தை அடைவதற்காகவே நான் வாழ்கிறேன். அவசியமானால், அந்த லட்சியத்திற்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் சித்தமாக இருக்கிறேன்.’

ரிவோனியா விசாரணையின் போது நீதிமன்றத்தில் நிகழ்த்திய வாதத்தின் முடிவுரையாக இச்சொற்களை மண்டேலா முழங்கினார்.


வல்லிக்கண்ணன் • 29