பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியிலிருந்து உறவினரும் முக்கியமானவர்களும் வந்து கைதியைச் சந்தித்துப் பேசுவது, கடிதங்கள் பெறுவதும் எழுதி அனுப்புவதும், படிக்கும் வசதி, அவரவருக்குத் தேவையான மளிகைச் சாமான்களையும் பிற அவசியப் பொருள்களையும் வாங்கிக் கொள்ளும் உரிமை-இவை எல்லாம் கைதிகள் பெறக் கூடிய சலுகைகள் ஆகும். கைதிகளின் வகுப்புப் பிரிவுக்குத் தகுந்தபடி இவை வழங்கப்பட்டன.

ஒருவர் பெறுகிற தண்டனைக் காலத்துக்குத் தக்கபடி வகுப்புப் பிரிவுகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். ஒருவர் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ‘டி’ வகுப்புக் கைதியாகக் கருதப்படுவார். அடுத்த இரண்டு ஆண்டு களுக்கு அவர் ‘ஸி’ வகுப்புக் கைதியாவார். அதற்கு அடுத்த இரு ஆண்டுகள் ‘பி’ வகுப்புக் கைதியாகவும், கடைசி இரண்டு ஆண்டுகள் ‘ஏ’ வகுப்புக் கைதியாகவும் நடத்தப்படுவார்.

‘டி’ வகுப்புக் கைதி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஒரே ஒரு கடிதம் தான் பெறமுடியும். அதைப் பற்றிக் குறை கூறினால், நீ நல்லவனாக நடந்து கொள்; அதன் பிறகு நீ ‘ஸி’ வகுப்புக் கைதி ஆவாய். அப்போது ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை நீ இரண்டு கடிதங்கள் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.

போதுமான அளவு உணவு கிடைப்பதில்லை என்று முறையிட்டால், நீ ‘ஏ’ வகுப்புக் கைதியாக வேண்டும்; அப்படியானால் நீ வெளியிலிருந்து மணியார்டர் மூலம் பணம் வரப்பெறலாம்; அதை வைத்துச் சிறை காண்டினிலிருந்து உனக்குத் தேவையான உணவை நீ வாங்கிக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் கூறுவார்கள். விடுதலைக்காகப் போராடித் தண்டனை பெற்றுச் சிறைவாசம் செய்கிற கைதி கூட ‘ஏ’ வகுப்பு கிடைக்கப் பெற்றால் தனக்குத் தேவையான மளிகைப் பொருள்களையும் புத்தகங்களையும் வாங்கிப் பயனடைய முடியும்.

இந்த வகுப்பு வாரியாகக் கைதிகளைப் பிரிக்கும் முறையை மண்டேலாவும் அவர் தோழர்களும் வெறுத்தார்கள். அது ஊழல் நிறைந்ததாகவும், மனிதரை அவமதிப்பதாகவும் இருந்தது.


வல்லிக்கண்ணன் • 33