பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிறைக்கைதிகளை, முக்கியமாக அரசியல் கைதிகளை அடக்கி ஒடுக்குவதற்கு அதிகார வர்க்கம் கையாண்ட மற்றொரு உபாயமாகவும் அது செயல்பட்டது. எல்லாக் கைதிகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மண்டேலாவும் தோழர்களும் எதிர்ப்புக் காட்டினார்கள்.

அவர்கள் இந்த வகுப்புவாரி முறையைக் கண்டித்து எதிர்த்தபோதிலும், அதற்கு அடங்கியே நடக்க வேண்டி யிருந்தது. சிறை வாழ்க்கையின் மாற்ற முடியாத செயல் திட்டமாக அது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் இப்படிச் சிறைக் கைதிகளை வகுப்பு வாரியாகப் பிரித்து வைக்கும் திட்டத்தை, அரசியல் கைதிகளுக்கு எதிராக உபயோகிக்கக் கூடிய ஒரு ஆயுதமாகச் சிறை அதிகாரிகள் கையாண்டு வந்தார்கள். கைதிகளை அடக்க விரும்பினால், அவர்களுக்கு உரிய - அவர்கள் வெகு அரிதாகப் பெறக்கூடிய - வகுப்பு மாற்றம் பெறும் உரிமையை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தினார்கள். மேல் வகுப்பிலிருந்து கீழ் வகுப்புக்குத் தள்ளி விடுவோம் என்று அச்சுறுத்துவது அதிகாரிகளின் பழக்கமாக இருந்தது.

நெல்சன் மண்டேலா, ராபன் தீவுச் சிறைக்கு மாற்றப்படு வதற்கு முன்பே வேறு சிறையில் இரண்டு ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் ராபன் தீவுச்சிறையில் அவர் ‘ஸி’ வகுப்புக் கைதியாக அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அங்கும் ‘டி’ வகுப்புக் கைதியாகவே சேர்க்கப்பட்டார்.

உயர்ந்த வகுப்பில் சேர்க்கப்பட்டால் கிடைக்கக் கூடிய சலுகைகளை மண்டேலா விரும்பினார்தான். ஆனால் அதற்காக அவர் பணிந்து போய்த் தனது செயல்முறைகளை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை. அதிகாரிகளுக்குப் பணிந்து நடப்பதன் மூலமும், எது பற்றியும் குறை கூறாமல், எதிர்ப்புக் காட்டாமல் இருப்பதனாலும், விரைவில் வகுப்பு மாறுதல் பெற்றுவிட முடியும். ஆனால் மண்டேலா இந்தப் போக்கை விரும்பியதில்லை.


34 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா