பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எப்போதும் தொல்லை கொடுப்பவராகவே இருப்பதால், மண்டேலா ஆயுள்காலம் முழுவதும் ‘டி’ வகுப்பிலேயே இருக்க வேண்டியதுதான் என்று சிறைக் காவலர்கள் சொல்வது வழக்கம்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ‘சிறை வாரியம்’ (பிரிசன் போர்டு) கூடும். கைதிகளை அழைத்து விசாரிக்கும். வகுப்பு மாற்றம் செய்வதற்கான மதிப்பீடுகள் நடைபெறும் சிறையின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பக் கைதிகள் நடந்துகொள்ளும் தன்மையை மதிப்பிடுவதற்கும், உரிய வகுப்பு மாறுதலை வழங்குவதற்குமாக ஏற்பட்டது அந்த வாரியக் கூட்டம்.

ஆனால் இங்கோ அது ஒரு அரசியல் விசாரணைக் குழு போலவே இயங்குவதை மண்டேலாவும் அவர் சகாக்களும் கண்டுகொண்டார்கள்.

மண்டேலா முதல் முறையாகச் சிறைவாரியக் கூட்டத்தில் கலந்து கொண்டபோது, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் பற்றியும், அவரது குறிக்கோள்கள் பற்றியும் அதிகாரிகள் விசாரித்தார்கள். அதிகாரிகள் கைதிகளையும் மனிதராக நடத்துவது இவ்வாரியக் கூட்டத்தில் மட்டும்தான்.

அதனால் மண்டேலா இயல்பாக விரிவாகவே எடுத்துச் சொன்னார். வகுப்புப் பிரிவுக்கும் இந்த விசாரிப்புக்கும் எவ்விதமானசம்பந்தமும் கிடையாது. எனினும் அவர்களையும் தனது கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் ஏற்றுக் கொள்ளும்படி செய்து விடலாம் என்ற வீணான ஆசை அவர் உள்ளத்தில் படிந்திருந்தது. எனவே அவர் மனம் விட்டுப் பேசினார்.

சிறை அதிகாரிகளின் தந்திரத்தை அவர் விரைவிலேயே புரிந்து கொண்டார். கைதிகளிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் கையாண்ட உத்தி அது என்பது அவருக்கு விளங்கியது. எனவே, மேலும் சிறை வாரியத்தினரோடு அரசியல் ரீதியான பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளக்கூடாது என மண்டேலாவும் சகாக்களும் தீர்மானித்துச் செயலாற்றினார்கள்.


வல்லிக்கண்ணன் • 35