பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதைவிட மோசமானது குடும்பத்தார் எவரிடமிருந்தும் எந்த விதமான தகவலும் வரப்பெறாமலிருப்பது.

குடும்பத்தினரிடமிருந்து செய்தி எதுவுமே கிடைக்காத போது, சிறைப்பட்டிருப்பவர் உறவினர்களைப் பற்றிப் பயங்கரமான, விபரீதமான, கொடூரமான கற்பனைகளில் ஈடுபடுவது இயல்பானதாகும்.

நடைமுறையில் மிகத் துன்ப துயரமான சோகமயமான செய்திகள் கிடைத்தால் கூடக் கைதியின் மனம் அவ்வளவு வேதனைப்படாது. கடிதம் எதுவுமே வராமலிருப்பதை விட, துக்ககரமான செய்திகளைக் கொண்ட கடிதம் கிடைக்கப் பெறுவதையே கைதிகள் விரும்புவார்கள்.

பரிதாபத்துக்கு உரிய, துக்ககரமான இந்தக் கட்டுப்பாட்டிலே கூட, சிறை அதிகாரிகள் தங்கள் வேலைத் தனங்களைக் காட்டுவது வழக்கமாகயிருந்தது.

கடிதம் வருகிற நாளைக் கைதிகள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். மாதம் ஒரு தடவை கடிதப்பட்டுவாடா நாளாக அமையும். சிலசமயம் ஒரு கடிதம் கூட வராமல் ஆறுமாத காலம் ஓடிவிடும்.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஒரே ஒரு கடிதம் என அனுமதிப்பது; பிறகு கடிதம் எதுவும் வரவில்லை என்று அறிவித்து விடுவது என்பது கைதிக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பெரிய அடி ஆகும். அதுமாதிரி சமயத்தில் கைதி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்.

என் மனைவிக்கு என்ன ஆகியிருக்கும்? என் குழந்தைகள் என்ன ஆனார்களோ? என் அம்மாவுக்கும், அக்கா தங்கைகளுக்கும் ஏதாவது நிகழ்ந்திருக்குமோ? இப்படி எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணிக் கைதியின் மனம் படாதபாடுபடும்.

எனக்குக் கடிதம் எதுவும் வராதபோது, என் மனம் வெகுவாக வறண்டு விடும்; மிகப்பெரிய பாலைவனம் போல என் உள்ளம்


வல்லிக்கண்ணன் • 37