பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வறட்சி பெற்று ஈரப்பசையின்றி உறுத்தும் என்று மண்டேலா அந்த அனுபவம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

அதிகாரிகள், அடிக்கடி, பழிவாங்கும் நோக்குடன், மண்டேலாவுக்கு வரும் கடிதத்தை அவரிடம் கொடாமல் நிறுத்திக்கொள்வதும் நடக்கும். ‘மண்டேலா, உனக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது. ஆனால் அதை நாங்கள் உன்னிடம் தரமுடியாது!’ என்று அவர்கள் அறிவித்து விடுவார்கள்.

ஏன் கொடுக்கமுடியாது, கடிதத்தில் அப்படியென்ன தவறான தகவல் உள்ளது என்று விளக்கம் எதுவும் கூறமாட்டார்கள். அது யாரிடமிருந்து வந்த கடிதம் என்றும் சொல்ல மாட்டார்கள்.

அப்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்? ஆத்திரத்துடன் சீறி வெடித்து வசைபாட வேண்டும் என்ற உணர்வு எழுந்தால் அது நியாயமேயாகும். ஆனால் மண்டேலா தனது சக்தி அனைத்தையும் ஒருமுனைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, அமைதியாக இருந்துவிடுவார்.

பின்னர், விதி முறைப்படி உரியவழியில் தனது எதிர்ப்பைத் தெரிவித்துப் புகார் செய்வார். சில சமயம் அதற்குப் பலன் இருக்கும். அந்தக் கடிதம் அவரிடம் அளிக்கப்படும்.

கடிதங்கள் கிடைக்கப் பெற்றால், கைதிகள் அவற்றைப் போற்றிப் பரவசமடைவார்கள். ஒரு கடிதம் என்பது கோடை மழை போல அவர்களுக்கு உற்சாகம் தரக்கூடியது; அவர்களது மனசை மகிழ்ச்சியால் மலரவைக்கும் மாயசக்தி அது.

ஆனாலும் மண்டேலா தனது உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டார். தரப்படுகிற கடிதத்தை ஆவலுடன் கைப்பற்ற வேண்டும் எனும் மனத்தவிப்பு இருக்கும். ஆயினும் அவர் பரபரப்புக் காட்டமாட்டார். வெகுசாவதானமாக அதை அவர் வாங்கிக் கொள்வார். கடிதத்தைப் பிரித்து, அந்த இடத்திலேயே அதைப் படிக்க வேண்டும் என்ற அவா மனசுக்குள் இருக்கும். எனினும் அப்படிச் செய்யமாட்டார். அவரது தவிப்பையும்


38 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா