பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

செய்தித் தொடர்பு கொண்டிருப்பதாக போலீசார் சந்தேகித்தனர்; உறுதியாக நம்பினார்கள்.

எனவே, அவர் வேலை பார்த்த அலுவலகத்தில் அவர்கள் சோதனை நடத்தினார்கள். அதன் விளைவாக அலுவலக நிர்வாகம் வின்னியை வேலையிலிருந்து நீக்கிவிட்டது.

சமூக நல ஊழியர் என்ற தன்மையில் வின்னி அந்த வேலையைப் பெரிதும் நேசித்து வந்தார். அநாதைக் குழந்தைகளைத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர்களுக்குத் தத்துப் பிள்ளைகளாக்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச்செய்வது, வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடிக் கொடுப்பது, மற்றும் தேவையானவர்களுக்கு மருத்துவசிகிச்சை கிடைக்கும்படி செய்வது போன்ற சமூகப் பணிகளை அந்த அலுவலகம் கவனித்து வந்தது. இப் பணிகள் வின்னியின் மனசுக்குப் பிடித்திருந்தன. அதை இழந்ததும் அவர் அதிகம் உளவேதனை அனுபவித்தார்.

தன் மனைவிக்கு அளிக்கப்பட்ட தடை உத்தரவும், இதர வகைத் தொந்தரவுகளும் மண்டேலாவுக்கு மிகுந்த துயரம் அளித்தன. அவரால் மனைவியையும் மக்களையும் கவனித்துப் பாதுகாப்பு அளிக்க முடியாத நிலைமைக்காக அவர் வருத்தப்பட்டார்.

அவள் தன்னைத் தானே காத்துக் கொள்ள விடாதபடி அரசாங்கம் கொடுத்து வந்த தொல்லைகள் பற்றிய எண்ணம் அவரது மனத்துயரை அதிகப்படுத்தியது. அவரது கையாலாகத் தன்மையை எண்ணி அவர் மனம் புழுங்கியவாறு இருந்தார்.

சிறைக்குள் கைதியும் வருகையாளரும் பேசிக்கொள்வது மனசுக்குப் பிடித்த காரியமாக அமைவதில்லை. மறுபக்கத்தில் மனைவிக்குப் பின்னால் இரண்டு வார்டர்கள் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உள்ளே மண்டேலாவுக்குப் பின் மூன்று பேர் நின்றார்கள். கண்காணிப்பது மட்டுமே அவர்களது நோக்கமாக இருக்க-


வல்லிக்கண்ணன் • 43