பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொள்வது சாத்தியமாயிற்று. குடும்ப சம்பந்தப்பட்டவர்களைப் பற்றியே பேசுவதாகத் தோன்றும்படி செய்யவும் முடிந்தது.

மண்டேலாவுக்கு, மனைவியுடனான முதல் சந்திப்பு மிக முக்கியமானதாக இருந்தது. மண்டேலாவின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிவதில் வின்னி ஆவலுடையவராக இருந்தார்.

இதை மண்டேலா உணர முடிந்தது. சிறையில் கைதிகள் கடுமையாக வாட்டி வதைக்கப்பட்டார்கள் என்ற வதந்திகளை வின்னி கேட்டிருந்தார். ஆகவே அவர் கணவனின் உடல் நலம் பற்றி உணர்ச்சியோடு கேட்டார்.

அவர் நன்றாகவே இருக்கிறார்; அவர் உடல் நலத்தோடு இருப்பதை வின்னியே பார்த்தறிய முடியுமே; என்ன, முன்னைவிட அவர் ஓரளவு மெலிந்திருந்தார் என்று மண்டேலா மனைவியிடம் தெரிவித்தார். வின்னியும் மெலிந்தே காணப்பட்டார்.

கவலையும் துயரமுமே இதற்குக் காரணமாகும் என்று மண்டேலா கருதினார். வின்னி சதா பட்டினி கிடந்தார். அவர் சாப்பாட்டைக் குறைக்கக் கூடாது என்றும், போதுமான அளவு சாப்பிட வேண்டும் என்றும் மண்டேலா மனைவிக்கு வலியுறுத்தினார்.

அவர்களுடைய குழந்தைகள் ஒவ்வொருவரைப் பற்றியும் அக்கறையோடு விசாரித்தார். அவரது அம்மா, சகோதரிகள் பற்றியும், வின்னியின் சொந்தக்காரர்கள் பற்றியும் கேட்டறிந்தார்.

திடீரென, அவருக்குப் பின்னால் நின்ற வார்டர், ‘நேரமாகிவிட்டது! நேரமாகிவிட்டது!’ என்று சொல்வது அவர் காதில் விழுந்தது. அவரால் அதை நம்பமுடியவில்லை. அதற்குள்ளாகவா அரை மணி நேரம் ஆகிவிட்டது? சந்தேகத்துடன் அவர் வார்டன் பக்கம் திரும்பிப் பார்த்தார்.


வல்லிக்கண்ணன் • 45