பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

லும் மிகுந்த தாக்குதலுக்கு உள்ளாகக் கூடியவர்கள் குழந்தைகள் தான். நமது பொக்கிஷங்களில் மிகச்சிறந்தவை குழந்தைகளே.

குழந்தைகள் திறந்த வெளிகளில் மகிழ்ச்சியோடு விளையாட வேண்டும். அவர்கள் பசிக்கொடுமையினால் பாதிக்கப்படலாகாது; நோய்களினால் வதைபடக் கூடாது, எந்த விதமான தொந்தரவுகளாலும் தவறான வழிமுறைகளாலும் அவர்கள் பயமுறுத்தப்படுதல் கூடாது. அவர்களது இளம் பருவ நிலைக்குப் பெரும் சுமையாக அமையக் கூடிய செயல்களில் அவர்களை ஈடுபடுத்தலாகாது.

குழந்தைகள் உயிர்வாழ்தல், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு என்று ஏற்படுத்தப்பட்டுள்ள உலக சாசனத்தில் குறிக்கப் பெற்றுள்ள அனைத்தையும் நிறைவேற்றும் தளராமுயற்சியில் புதிய ஆப்பிரிக்காவை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்.

நாம் குறிப்பிட்ட வெகுமதி, இக் குழந்தைகளின் தாய்மார்களும் தந்தையரும் அனுபவிக்கிற சந்தோஷத்தாலும் அளக்கப்படும்; அளக்கப்பட வேண்டும்.

நாம் திருடப்படுவோம் அல்லது அரசியல் ஆதாயத்திற்காகவோ இதர லோகாயத லாபம் கருதியோ நாம் கொல்லப்படுவோம், அல்லது பிச்சைக்காரநிலையில் இருப்பதற்காக நாம் காறி உமிழப்படுவோம் என்ற அச்சம் எதுவுமின்றி அவர்கள் இந்த மண்ணில் உலாவர வேண்டும்.

பசி, வீடற்ற நிலை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றின் காரணமாகத் தங்கள் இதயங்களில் சுமந்து திரிகிற கனத்த அவநம்பிக்கையிலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.

துயரங்கள் அனுபவித்த அனைவருக்கும் அளிக்கப்படுகிற பரிசின் மதிப்பு, எங்கள் நாட்டின் அனைத்து மக்களின் நலத்தினாலும் சந்தோஷத்தினாலுமே மதிப்பிடப்படும் மதிப்பிடப் பெற வேண்டும்.


50 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா