பக்கம்:நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா (மொழிபெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தென் ஆப்பிரிக்க இனத்தினர் அனைவரும், தகுந்த பேச்சு வார்த்தைகள் மூலமும் வெள்ளை இனத்தவரோடு சம அளவில் கூடியும், அவர்களது எதிர்காலத்தை அவர்கள் எவ்வாறு அமைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கலந்தாலோசித்து முடிவு செய்ய வேண்டும் என்று, ஆப்பிரிக்க மக்களைப் புரிந்து கொள்ளவும் அங்கீகரிக்கவும் கூடிய மனமும் தீர்க்க தரிசனமும் அவருக்கு இருந்தது.

படுநாசத்தை மட்டுமே விளைவிக்கும் என்று நிரூபிக்கப்பட்டு விட்ட பிரத்தியேகக் கொள்கையை இறுகப்பற்றிக் கொண்டிருப்பதன் மூலம் நியாயத்துக்கும் சமாதானத்துக்கும் தங்களால் பங்களிக்க முடியும் என்று தவறாக நம்பிக் கொண்டிருக்கிற சில பேர் எங்கள் நாட்டிக்குள்ளேயே இன்னும் இருக்கிறார்கள்.

சரித்திரம் நிராகரிக்கப்படாது என்பதையும், மாபெரும் வெறுப்புக்கு உரிய கடந்த காலத்தைப் புது மெருகிட்டு வசீகர உறைகளில் பொதிந்து கொடுப்பதன் மூலம், புதிய சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வதற்குப் போதுமான ஞானம் அவர்களுக்குச் சித்திக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா தன்னைத் தானே புதிதாக அமைத்துக் கொள்ளப் போராடுகிற நிலையில், பிறப்பதற்குப் போராடிக் கொண்டிருக்கும் புதிய உலகத்தின் சின்னஞ்சிறு வடிவமாக தோற்றம் தரும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் வாழ்கிறோம்.

மானுட உரிமைகளை மதிக்கும் ஜனநாயக உலகமாக, வறுமை - பசி - பிடுங்கிக் கொள்வதனால் ஏற்படும் இழப்பு - அறியாமை ஆகிய கொடுமைகளிலிருந்து விடுபட்ட ஒரு உலகமாக, உள்நாட்டு யுத்தம் மற்றும் வெளிப்புற ஆக்கிரமிப்பு எனும் துன்புறுத்தல்கள் நீங்கப் பெற்ற உலகமாக, கோடிக்கணக்கான மக்கள் அடிமைப்படுத்தப்படும் பயங்கர நிகழ்வு எனும் சுமை அகற்றப்பட்ட உலகமாக அது அமையவேண்டும்.


54 • நெருப்பு மனிதன் நெல்சன் மண்டேலா