பக்கம்:நெற்றிக்கண்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 115

உலகம் அதை அவ்வளவு விரைவாக நம்பிவிடப் போவதும் இல்லை. வசதியற்றவர்கள் உரத்த குரலில் எழுந்து நின்று உண்மையைக் கூறினாலும் அது நம்பப்படுவதில்லை. வசதி யுள்ளவர்கள் மெல்லிய குரலில் இருந்த இடத்திலிருந்தே பொய்யைக் கூறினாலும் அது இந்த சமூகத்தில் உடனே, நம்பப்படுகிறது. வசதிகளையும் வாழ்க்கையையும் சரியான உயரத்துக்கு-அத்தனை பேரும் கவனிக்கிற நிலை எதுவோ அந்த நிலைக்கு-வளர்த்து மேடை போட்டுக் கொண்டால் தான் அப்புறம் உண்மையையும்,பொய்யையும் அது உண்மை யாகவோ பொய்யாகவோ ஒப்புக்கொள்ளப் படுகிறார் போலப் பேச முடியும் போலிருக்கிறது. இந்த நிலையில் என்னைப் போன்ற அபலைப் பெண் வேறென்ன செய்ய முடியும் தேவைக்காகச் சம்பாதிப்பதை விட நான் என்னை அழிந்துபோய் விடாமல் காப்பாற்றிக் கொள்வதுதான் முக்கியம். என் நிலைமை இரண்டுங்கெட்டானாகிவிட்டது. 'அம்மா! உங்கள் கணவர் இப்படிப்பட்டவராக இருக்கும் போது தான் இங்கே வேலைக்கு வருவது முடியாத காரியம்’ என்று அந்த டாக்டரம்மாளிடம் நான் சொல்லக்கூட முடிய வில்லை. அப்படிச் சொன்னால் அது அவர்கள் குடும்ப வாழ்வில் கலகத்தை உண்டாக்கலாம். எனவே நான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையிலிருந்து நின்று விட்டேன். இன்று காலையில் அந்த டாக்டரம்மாள் ஹாஸ்டலுக்கு ஃபோன் செய்து என்னைக் கூப்பிட்டு, ஏன் வரவில்லை?-என்று கேட்டாள்.

"ஃபைனல் வருடமாயிருப்பதால் படிப்பு அதிகமாக இருக்கிறது. உங்களிடம் சொல்வதற்குப் பயமாயிருந்தது. அதனால் சொல்லாமலே நின்று விட்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா!' என்று ஒரு விதமாகப் பதில் சொல்லி மழுப்பி விட்டேன். மேலே என்ன செய்வதென்று தான் தெரியவில்லை. அந்த நூறு ரூபாய் இல்லாவிட்டால் இங்கே சென்னையில் காலம் தள்ளிப் படிப்பது என்பது முடியாத காரியம். படிப்பை நிறுத்திவிட்டு ஊருக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/117&oldid=590488" இலிருந்து மீள்விக்கப்பட்டது