பக்கம்:நேசம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால்63


ஆனால் மங்களம் குறைந்துகொண்டிருந்தாள். திடுக் கென்று இன்னிக்கும் நாளைக்கும் தெரியறாப் போலில்லை. நாளுக்கு நாள் இம்மி இம்மியா, கண்ணுக்கெதிரே கண்ணுக் குத் தெரியாமல் ஒரு இளைப்பு. அவளே கொஞ்சம் அழுத்தம், வெளியில் காட்டிக்கொள்ளமாட்டாள். இப்போ பேச்சு இன்னும் குறைந்துபோய், முகத்தில் ஏதோ யோசனை. யோசனை நாளடைவில் கவலையாக மாறிற்றோ? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. கண்ணில் ஏதோ திகில் தெரிந்ததோ? எதையோ எதிர்பார்த்துக் கொண்டிருப்பது போல்! ஆனால் நானும் பெரிதாகப் பாவிக்கவில்லை. எனக்கு ஆபீசில் ஆயிரம் பிடுங்கல். கூடக் கண் உபத்திரவம். திடீரென்று பொருள்கள் விசுவரூபம் அடிக்கிறது. உடனே ஒரேயடியாகச் சிறுத்துவிடும். கண் டாக்டரிடம் போகப் பயம் எல்லாம் பைசாதான். அவன் என்னத்தையேனும் சொல்லிவிட்டு, இருக்கிறதெல்லாம் கொண்டுவா என்றால்? ஆனால் ஒருநாள் காலை அவசரச் சாப்பாட்டில் அவள் பரிமாறுகையில் அவளுடைய ஒட்டிய கன்னமும் தூக்கிய தோள் எலும்பும் சட்டென்று கண் பட்டதும் நெஞ்சு பக்கென்றது. என்ன மங்களம் உடம்பு? டாக்டரிடம் போவோமா?" "எனக்கு ஒரு கேடுமில்லை. டாக்டரிடம் எதுக்கு? நமக்குக் காசு கொழுத்துக் கிடக்கா? முதலில் உங்கள் கண்னைப் பார்த்துக் கொள்ளுங்கள்." ஒருநாள் காலை பால் வரவில்லை. அந்த வேளைக்குக் காப்பி குடிக்காவிட்டால் மண்டையிடிதான். பால்காரன் வீடு பக்கத்துத் தெருதான். சொம்பைத் தூக்கிக்கொண்டு போனேன். வாசலில் பெரும் கூட்டம், உள்ளே ஒப்பாரி. உள்ளே போய்ப் பார்த்தால் நடுக்கூடத்தில் வெட்டிச் சாய்த்த மரம்போல் ஆள் மல்லாந்து கிடக்கான். அப்போதுதான் கால் மணி நேரத்துக்கு முன்னால் மாரடைப்பு. வாஸ்தவம். அவ்வளவு பெரிய சரீரத்துக்குக் கைக்குத்தளவு இதயம் எத்தனை நாள் எவ்வளவு பாய்ச்சல் தாங்கமுடியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/69&oldid=1403499" இலிருந்து மீள்விக்கப்பட்டது