பக்கம்:பச்சைக்கனவு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 0 லா. ச. ராமாமிருதம்

போதுமடா போதும் அழகைக் கட்டிக்கொண்டு அவஸ்தைப்பட்டது போதும் போதும். அழகின் திக்குக்கே ஆயிரம் சலாம்:

தருமி இருந்தாளே, கன்னிகாதானமாய்ப் பெற்று மூத்தாள், தர்மபத்ணி உண்மையான சகதர்மிணி, அவளிடம் இந்த சங்கடமெல்லாம் கிடையாது. ஆள் என்னவோ மத்தளம் மாதிரிதான் இருப்பாள். மூக்குமுழி கிடையாது. சூதுவாதும் கிடையாது. மனசில் எதையும் பொத்தி வைக்கவே தெரியாது. மெதுவாய்ப் பேசினாலே கூடம் அதிரும், கருவேப்பிலைக்காரிக்கு ஒரு கையரிசி போட்டு விட்டு இன்று முழுக்க கொசுறிக் கொண் டிருப்பாள். 'விட்டுடேன்' என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும். 'காசின் அருமை உங்களுக் கென்ன தெரியும்?' என்று கையை நீட்டிக்கொண்டு நம்மோடு சண்டைக்கு வந்து விடுவாள். இருந்தால் என்ன? அதிர்ஷ்டசாலி அவள் வந்துதான் வீடே விளங்க ஆரம்பித்தது நமக்கும் உத்தியோகம் வளர்ந்தது. அவளுக்கு வேனுமானால் அதிர்ஷ்டமில்லை. பிறந்தும் ஒன்றும் தக்கவில்லை. குழந்தைகளைக் கண்டாலே எவ்வளவு ஆசை! என்ன அருமையாய் சமைப்பாள்! அந்த எலுமிச்சபழ ரஸம் ஒண்ணே போதுமே, சின்ன விஷயங் களிலே சிறு மனசாயிருந்தாலும்!

கடைசியில் அதுதான் அவள் உயிருக்கு உலை வைத்தது. ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறது என்று வெச்சுக்கோ. ஊசிப் போன பண்டங்களிலேயே அவளுக்கு ஒரு தனி ருசி. 'சாஸ்திரி பொண்ணே, இங்கே நன்னா சாப்பிடலாண்டி’ என்றாலும் கேட்க மாட்டாள். "உங்களுக்கென்ன தெரியும் இளம் ஊசலுக்கே ஒரு ருசி. எனக்கு இப்போ ஆசாரமா, ஜபம் கிபம் தட்டுக் கெட்டுப் போறதா? சாமானை வீணாக்க எனக்கும் மனசாகாது' என்று ஒரே அடி அடித்து விடுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/155&oldid=590813" இலிருந்து மீள்விக்கப்பட்டது