பக்கம்:பச்சைக்கனவு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 0 லா. ச. ராமாமிருதம்

திடீரென்று உள்ளிருந்து ஓடிவரும் நடையின் திடுதிடுப்பில், மெட்டியின் இன்னொலி கேட்டுத் திரும்பினான், குப்பென்று கேவிய மூச்சு அவன் முகத்தை எரித்து, ஆசை மீறிய தோள்கள் கழுத்தில் விழுந்து இறுகின. இளமையும் குளுமையும் வெறிவீசும் உடல் அவன் மேல் அலைமோதி அலைகீழ் மூழ்கினான். அவள் கையில் பச்சை குத்திய தேளும், பருத்தி வெடித்தாற் போன்று சதைப் பிடிப்பில் விட்டுக்கொண்டிருந்த ரவிக்கை யிலிருந்து பிதுங்கிய தோள் தழும்பும் கன்னத்து மச்சமும் மண்டையுள் புருவ நடுவில் பளிரிட்டன. உடல் மணம் காற்றுவாக்கில் சிறு வெடிப்பாய் குபிர்- மளுக்வளையல் முறிந்தது

அவள் விரல்களில் ஆவேசங் கண்டுவிட்டது! அவள் புறங்கை மேட்டில் அவைகளின் பதுங்கல் பாய்ச்சலாகி, அவை அவள் கையை முரட்டுத்தனமாய்ப் பிடித்து அமுக்கிப் பிசைந்தன. அவை இப்போது பேசிய பாஷையே வேறு.

மூளை கொதித்தது. எச்சில் நாக்கில் வரண்டு, தொண்டையில் சிலந்திக் கூடு பின்னி, அதில் வார்த்தைகள் மாட்டிக் கொண்டு வெளிவர இயலாது தவித்தன.

"நேனு- நேனு- நீவு- நீவு-"

அவள் முகத்தில் ரத்தம் வடிந்து, மறுபடியும் விர்ரென்று பாய்ந்து குழம்பியது. கையைத் திமிறிக் கொண்டு, அவன் கன்னத்தில் பளார் என்று ஒன்று விட்டாள். அவனுக்குக் காது ஜோ என இரைந்தது. கண்கள் வெளியே சிதறி விடும்போல் தெறித்தன. அவன் மேல் திடீரென திரண்டு கொண்டே கவியும் இருளில் அவள் வேகமாய் இடுப்பை ஆட்டி ஆட்டி ஒடித்து மிடுக்காய் நடந்து சென்று தூரத்தில் பூமியின் இறக்கத்தில் தலைமறைவது கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/59&oldid=590717" இலிருந்து மீள்விக்கப்பட்டது