பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

95


உள்ளத்தை உலுக்கிவிட்டது. அந்தப் பயங்கர எண்ணத் தின் வேகத்தைத்தாங்கமுடியாதவராக, அவர் பத்திரிகையை மூடி யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்ற காரண காரியமற்ற எச்சரிக்கையோடு அதைப் பட்டறைப் பலகைக்கு அடியில் போட்டுக்கொண்டார்!'முருகா'என்று ஒரு கணம் கண்ணை மூடி வாய்விட்டுப் பிரார்த்தித்துக் கொண்டார்; அலைமோதிக் கொந்தளிக்கும் சிந்தனையை அடக்கியாள முடியாமல், கண்களை மூடி யோக நிஷ்டை செய்ய முயன்றார்.

"முதலாளி!"

எதிர்பாராத விதமாக வந்த அழைப்புக் குரல் - கைலாச முதலியாரின் யோகத்தைக் கலைத்து விட்டது. கண்ணைத் திறந்து பார்த்தார். எதிரே வடிவேலு முதலியாரும் வேறு சில வாடிக்கை நெசவாளர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

"எங்கே வந்தீங்க" என்று தன்னுணர்வு பெற்றுத் திரும்பிய கைலாச முதலியார், அவர்களை நோக்கி நிர்விசாரமாகக் கேட்டார்.

'நூல் வாங்கிக்கிட்டுப் போகலாம்ணு வந்தோம்" என்று சுருக்கமாகப் பதிலளித்தார் வடிவேலு முதலியார்.

கைலாச முதலியார் இன்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒருகணம்சும்மாயிருந்தார். பிறகு அவர்களிடம் திரும்பி, "என்ன தம்பி, உங்களுக்கு நிலைமை தெரியாததா? வந்த சரக்கெல்லாம் அப்படியப்படியே உட்கார்ந்திருக்கு. ஒண்ணும் நகர்ந்த பாட்டைக் காணோம். இன்னும் நெய்து நெய்து எங்கேதான் அடுக்கி வைக்கிறது?" என்று பரிதாபமாகப் பதிலளித்தார்.

"அப்படிச் சொன்னா முடியுமா, முதலாளி? எங்க புழைப்பும் நடக்க வேண்டாமா?" என்று அங்கலாய்த்தார் ஒரு நெசவாளி.