பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98


பெருமூச்செறிந்து நின்றனர். எங்கு செல்வது, என்ன செய்வது என்பதே தெரியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு ஒருகணமும், ஒருவர்முகத்தை ஒருவர்பார்க்கத் துணிச்சலற்று மறுகணமுமாக, சிறிது நேரம் அங்கேயே நின்றனர். அவர்களிடையே நிலவிய பயங்கரமான சவ அமைதியை ஒருநெசவாளி துணிந்து கலைத்து அவர்களை உசுப்பிவிட்டார்:

"வாங்க, வாங்க நின்னு என்ன பிரயோசனம்?

நெசவாளிகள் குனிந்த தலை நிமிராமல் வீட்டை விட்டு வெளியேறினர்..

தீக்கோழி மணலுக்குள் தலையைப் புதைத்துத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கும் அசட்டுத் தனத்தைப் போல, கைலாச முதலியார் வீட்டுக்குள் சென்று தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள விரும்பினாலும், சூழ்நிலை அவரை அப்படி இருக்க விடவில்லை. எண்ணற்ற சிந்தனைக் குழப்பங்கள் வலை பின்னிச் சிக்கிப் பிணைக்கும் வேதனையிலிருந்து, திமிறும் வழி தெரியாமல் திகைத்துப் போய், கட்டிலில் தலைசாய்த்துக் கிடந்த கைலாச முதலியாரை மீண்டும் அந்தக் குரல் உசுப்பி எழுப்பியது.

மாடியிலிருந்து இறங்கி வந்த மணி தந்தையின் அருகே சென்று நின்று, அருமையோடும் பவ்வியத்தோடும் அழைத்தான்.

“அப்பா”

கைலாச முதலியார் கண்விழித்து உட்கார்ந்தார்.

"என்னப்பா?"

"ஸீஸன் டிக்கெட் தீர்ந்து போச்சு. நாளைக்குப் புதுசு வாங்கியாகணும்" என்று விஷயத்தை விளக்கினான் மணி.