பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112




"கமலாவை அந்தக் கைலாச முதலியார் மகன் மணிக்குக் கட்டிக் கொடுக்கணும்ணு ஒரு யோசனை. கமலாவுக்கும் மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்கு. சாங்கர்தான் எல்லாத்தையும் சொன்னான். சரி, பார்ப்போமின்னேன்_" தர்மாம்பாள் எப்படியோ இந்த விசயத்தைச் சொல்லி முடித்துவிட்டாள்.

தர்மாம்பாளின் பேச்சைக் கேட்டதும், தாதுலிங்க முதலியாருக்கு இன்னதென அறிய முடியாத ஒரு வேகமும் வெறியும் ஏற்பட்டன. அவர் தமது இருக்கையிலிருந்து துள்ளி எழுந்தார். அந்த ஹால் முழுவதும் எதிரொலித்து விம்மும்படி, ஒரு உறுமல் உறுமிவிட்டு, கோபாவேசமாகப் பேசத்தொடங்கினார் அவர்:

"என்ன சொன்னே? அந்த ஊதாரிப்பயல் மகனுக்கா என் பெண்ணைக் கட்டிக் கொடுப்பேன்? சொத்துபத்து இல்லாத சோம்பேறி நாய்களோடேயா சம்பந்தம்? சங்கர் சொன்னானாம்;இவள் கேட்டாளாம்! இந்தவீட்டுக்குநான் அதிகாரியா?இல்லை, அவன் அதிகாரியா?"

தரையிலேகால்கள் தரிக்காமல், நிலை கொள்ளாமல் புழுங்கித் தவித்தார் தாதுலிங்க முதலியார். என்றைக்கும் இல்லாதவாறு தன் தந்தை ஏதோ கோபாவேசத்தில் அலறுவதையும், அதில் தன் பெயரும் அடிப்படுவதையும் , கேட்டுணர்ந்த கமலா தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். கமலாவருவதைக்கண்டதும், தாதுலிங்க முதலியார் தமது ஆக்ரோஷத்தை யெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு, "கமலா, இங்கே வா" என்று கூப்பிட்டார். கமலா தன் தாயருகே வந்து நின்றுகொண்டு, "என்னப்பா?" என்று பயமும் வியப்பும் கலந்த குரலில் கேட்டாள்.

தாதுலிங்க முதலியார் பலவந்தமாக வரவழைத்த சாந்தபாவத்தோடு, தம் மகளிடம் பேசத் துணிந்தார்: