பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


தந்தையின் கோபாவேசத்தை அதிகநேரம் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. திடீரென்று உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு கணத்தைரியச்சிதைவு அவளது இதயத்திலேமுட்டிமோதிக் கொண்டிருந்த அழுகையையும் வேதனையையும் அணையுடைத்து வெளிப் பாயச்செய்தது.

"அம்மா!"என்றுபயங்கரமாகக்கதறிக்கொண்டே, தன் தாயின் மீது சாய்ந்து, அவளைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழத்தொடங்கினாள் கமலா.

கமலாவின் அலறலைக் கேட்டதும்தான் தர்மாம்பாளும் தனது திக்பிரமையிலிருந்து விடுபெற்றாள். தர்மாம்பாளுக்கும் கண்ணில் கண்ணீர் கரித்து முட்டியது. தொண்டைக் குழியில் ஏதோ உருண்டோடுவதுபோல் தோன்றியது. அவள் தனது பாசக் கரத்தால் கமலாவை இறுக அணைத்துக் கொண்டு "அழாதேம்மா" என்று உள்ளடங்கிக் கம்மிப் போன குரலில் தேற்றினாள். அத்துடன் தன் கணவனையும் நோக்கி, "எது எதை எப்படிச் சொல்லணும்ணு கிடையாதா? இப்போ இவளை அழவச்சி, என்னத்தைக் கண்டுட்டிக?" என்று கட்டிப்போன குரலில் கடிந்து கொண்டாள். '

ஆனால் தாதுலிங்க முதலியாரோ மனைவியின் பேச்சைக் கேட்பதற்காக அங்கு காத்து நிற்கவில்லை. ஹாலைவிட்டு வெளியேறி வெளி வராந்தாவுக்குச் சென்று விட்டார்; நிலை கொள்ளாது புழுங்கித் தவிக்கும் மனத்தோடு வராந்தாவில் மேலும் கீழும் வெறி பிடித்தது போல் உலவிக் கொண்டிருந்தார்.

"நல்லபிள்ளை வந்து வாய்த்தான் எனக்கு குலத்தைக் கெடுக்க வந்த கோடாலிக் காம்பு! பாவிப் பயல், இந்தப் பொண்ணு மனசையுமில்லெ கெடுத்து வச்சிருக்கான்!" என்று அவர் வாய்விட்டுத் தமக்குத் தாமே முனகியவாறு தமது ஆத்திரத்தைத் தணிக்க முயன்று கொண்டிருந்தார்.