பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


சர்க்கார் மந்திரியும், மாகாண சர்க்கார் மந்திரியும் கரைபோட்ட வேட்டிகளைக் கைத்தறிக்கு ஒதுக்குவதா வேண்டாமா என்று காரசாரமான வாதப்பிரதிவாதங்களை நடத்தி, கைத்தறி பிரச்னை மீது தமக்குள்ள அக்கறையை நாட்டு மக்கள் அறிய நாடகமாடிக்காட்டினார்கள்_

ஆனால்.?

இந்தத் திருப்பணிகளால் நிலைமை. மாறி விடவில்லை; இவற்றால் உறங்கிக் கொண்டிருந்த கைத்தறி களெல்லாம் உசும்பியெழுந்து இராப்பகலாய் கடகடத்து வேலை செய்யவில்லை. இதற்குப் பிறகும், கைத்தறி நெசவாளர்கள் பிழைத்துக் கிடந்தார்கள் என்றால், வேலை செய்து கூலி பெற்றுப் பிழைக்கவில்லை. ஆனால் வீடு வாசலை, நிலபுலத்தைவிற்றுத்தான் பிழைத்தார்கள்; பண்ட பாத்திரங்களை, நகை நட்டுக்களை அடகுவைத்தும், விற்றும் பிழைத்தார்கள்; தாலியை விற்றுப் பிழைத்தார்கள்; பிள்ளைகளை விலைகூவிப் பிழைத்தார்கள்; பிச்சை யெடுத்துப் பிழைத்தார்கள்: 'மானத்தை மரியாதையை, கற்பை, கண்ணியத்தை விற்றுத்தான் பிழைத்தார்கள்....

இதனால், நாளாரம்பத்தில் சைத்தறிப் பிரச்னை மூன்றுலகையும் ஈரடியால் அளந்து முடித்த வாமன அவதாரியைப் போல், விஸ்வரூபம் கொண்டு கைத்தறி நெசவாளிகளை, அவர்களைச் சார்ந்து வாழும் சிறு வியாபாரிகளை, இந்த நாட்டு மக்களின் பரம்பரை நலன்களை, உயிர்களைப் பலி கேட்டு நின்றது...

"ஏன், ஏன்?" என்று நெசவாளர்கள் ஏங்கினார்கள்; வியாபாரிகள் கவலை கொண்டார்கள்; பொதுமக்கள் சிந்தித்துப் பார்த்தார்கள்....

கைலாச முதலியாரும் சிந்தித்தார்; கவலை கொண்டார்.

ஆனால், தமது கஷ்டத்தின் காரணத்தைப் பற்றிய சிந்தனையோ அவருக்கு மரத்துத்தடித்துப்போய்விட்டது,