பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


கீழே ஏதோ வார்த்தை தடிப்பதாக உணர்ந்த மணி, மாடியிலிருந்து அவசர அவசரமாகக் கீழே இறங்கிவந்தான்; ஆனால் அவன் வருவதற்குள் மைனர் முதலியாரும் அவருக்குப்பின் வந்த ஆசாமியும் வெளியேறிவிட்டார்கள்.

மணி தன் தந்தை இருந்த நிலையைப் பார்த்தான். கூப்பிடுவோமா வேண்டாமா என்று ஒருகணம் தயங்கினான்.

"அப்பா_ அப்பா"

மேஜைமீது தலை சாய்த்துக் கிடந்த கைலாச முதலியார் தம் மகனின் முகத்திலேயே விழிக்கக் கூசினார். அவரது உடலெல்லாம் குன்றிக் குறுகி ஒடுங்குவது போலிருந்தது. மகனை ஏறிட்டுப் பார்க்காமலே, "நீ போடா, ஒண்ணுமில்லே" என்று கட்டி வறண்டு போன அடிக்குரலில் கூறினார்.

மணி நிலைமையை ஊகித்தவனாக ஒன்றும் பேசாமல் வீட்டுக்குள் திரும்பிச் சென்றான்.

மகன் சென்ற பின்னர் கைலாச முதலியார் தமது வேட்டி முனையை எடுத்துக் கண்ணில் ததும்பிக் கரித்து நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டார்; கலங்கிய கண்களோடு தலை நிமிர்ந்தார்.அவருக்கு எதிரே ஆறுமுகப் பெருமான் கல்யாண சொரூபனாய் அசையாது நின்றார்; அந்தப் படத்தையே வெறித்துப் பார்த்தவாறு வெந்து சாம்பும் உள்ளத்தோடுகல்லாய்ச் சமைந்திருந்தார் கைலாச முதலியார்.

'முதலாளி!"

உணர்வு மீண்ட முதலியார் திரும்பிப் பார்த்தார். எதிரே இருளப்பக்கோனார் வெறுங்கையோடு நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்று திடுக்கிட்டுக் கேட்டார் முதலியார்.