பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

131


"மருந்து விலை பதினெட்டு ரூபாயாம்!" என்று சொல்லமாட்டாமல் சொல்லி முடித்தார் கோனார்.

"பதினெட்டு ரூபாயா" பிளந்த வாய் மூடாமல் பிரமை பிடித்தவர்போல் சுவரில் சாய்த்தார் முதலியார்; அவரது கண்களிலிருந்து நீர் பொங்கி வழிவதை அவரால் தடுக்க முடியவில்லை.

இருளப்பக் கோனாருக்கு நிலைமையைப் புரிந்து கொள்ள வெகுநேரம் ஆகவில்லை. அவர் மனம் இருண்டது. ஆனால் மறு கணமே அவர் மனத்தில் ஒளி வீசியது. தமது முதலாளியின் பதிலையே எதிர்பாராதவராக, "முதவாளி, கவலைப்படாதிங்க. எப்படியம் மருந்தை வாங்கிக்கிட்டு வந்திருதேன்" என்று கூறிவிட்டு, ஓட்டமும் நடையுமாக வெளியேறினார் இருளப்பக்கோனார். அவரது மனக்கண் முன்னால் அவரது மனைவி மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த பிள்ளையார் தாலி நம்பிக்கை ஒளிபரப்பி அவரது கால்களுக்குப் புத்துணர்வும், புது வலிவும் ஊட்டியது!

கைலாச முதலியார் உயிரும் உணர்வுமற்ற கற்சிலை போல் ஆடாது அசையாது அமர்ந்திருந்தார். அவரது கண்ணிலிருந்து கொப்புளித்துப் பெருகும் நீர்த் திரைக்கு அப்பால், எதிரே ஆறுமுகப் பெருமான் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்புக் குதூகலித்துப் பொங்க, தமது பக்தனை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்.

கைலாச முதலியாரின் உள்ளம் காளவாய் நெருப்பிலிட்டது போல் வெந்து கனன்று நீறிக் குமைந்தது. அவரது சித்தவெளிக்குள்ளே கோடானு கோடி எரிமலைகள் தமது அடிவயிற்றைத் திருகிக் கலக்கும் வேதனையைத் தாங்க மாட்டாமல், நெருப்பையும் அக்கினிக் குழம்பையும் புகையையும் புழுதியையும் ஓங்கரித்து வாந்தியெடுக்கப் போவது போல் குமுறிக் கொதித்துக் கொண்டிருந்தன; பிரளய கால ஊழி நாசம்போல், அவரது உள்ளத்தில்