பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132


எண்ணிறந்த மகாசமுத்திரப் பரப்புக்கள் பொங்கியெழுந்து, ஆயிரம் தலை உயர்த்திய ஆதிசேடனைப்போல் தங்கள் அலைக்கரங்களை வீசிப்புடைத்து ஆர்ப்பரித்தன. அவரது. சின்னஞ்சிறு இருதயமும் கொதிப்புற்ற மூளையின் முகுளத் தவழும் பிரபஞ்ச கோளங்களைப்போல வீங்கிப் புடைத்துப் பருத்து அசுர வேகத்தில் கறங்கிச் சுழல்வது. போலிருந்தன.

கைலாச முதலியார் தமக்கு எதிரே தோன்றிய ஆறுமுகப் பெருமானை, திரிபுரத்தையும் எரித்த ருத்திரனைப்போல் கண்ணில் தீப்பொறி பறக்க வெறித்து நோக்கினார்.

அவரது எண்ணக் குகையிலே திசைமாறிச் சுழலும் எண்ணற்ற உணர்ச்சிச் சுழிப்புக்கள் குமிழியிட்டுக் கொப்புளித்துப் பெருகின.

-"முருகா! என் அப்பனே! எனக்கு ஏனப்பா இந்தச் சோதனை? என்னை ஏன் இப்படி சந்தி சிரிக்க வைக்கிறாய்? உனக்கு நான் என்ன குறையப்பா வைத்தேன்? கோயில் சொத்தைத் திருடித் தின்றவர்களெல்லாம் நல்ல முறையில் வாழும்போது, தெய்வத் திருப்பணியில் ஒரு குறையும் வைக்காத எனக்கா இந்த நிலைமை? எனக்கா இந்த அவமானம்? பதில் சொல்_

-"சொல்ல மாட்டாயா? சிரித்துக் கொண்டா நிற்கிறாய்? நான் படும் அல்லலைக்கண்டு உனக்குச் சிரிப்பா வருகிறது. என்மீது உன் சித்தம் இறங்கவில்லை? கள்ள மார்க்கெட் காரனுக்குத் தானா உன் கருணாகடாட்சம்? அடே, கல் நெஞ்சுக்காரா! என் வீடு வாசல் நிலம் புலம் எல்லாவற்றையும் சூறையாடி வாரியிறைக்க வைத்ததும் காணாதென்று என் குழந்தையையுமா பலிகேட்டுச் சிரிக்கிறாய்? பெற்றெடுத்த பிள்ளைக்கு ஒருவேளை மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட விதியற்றுச் செய்து விட்டாயே. நீ தெய்வம்தானா?