பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136


டாக்டர் குனிந்த தலை நிமிராமல் நின்றார்.

தங்கத்துக்கு விஷயம் புரிந்து விட்டது. "போயிட்டியாடா மகனே!" என்று அவள் அலறினாள்; அவளது கதறல் அந்த வீட்டின் முகட்டையே பிய்த்துப் பேர்த்தெறிவது போல் எதிரொலித்து விம்மியது...

மணியின் வரவை எதிர்நோக்கி வெளி வராந்தாவில் வந்து நின்று கொண்டார் டாக்டர்.

இருளப்பக் கோனார் மேல் மூச்சு வாங்க ஓடோடியும் வந்தார். ஆனால் அவர் வீட்டுவாசலை நெருங்குவதற்குள்ளாகவே, உள்ளிருந்து பொங்கியெழுந்த தங்கத்தின் அழுகுரல் அவருக்கு விஷயத்தைத் தெரிவித்து விட்டது. அவரது கால்கள் குழலாடிச் சோர்ந்தன; அவர் அப்படியே வாசற் புறத்திலேயே திடுக்கிட்டு நின்று விட்டார். அவரது கையில் இருந்த மருந்துப் பெட்டி பிடி தவறிக் கீழே விழுந்து சப்தித்தது. உடைந்து கசியும் ஊசி மருந்து அந்த அட்டைப் பெட்டியை நனைந்து வழிந்தோடியது!....

திடீரென்று தங்கம்மாளின் பிரலாப ஓலத்தையும் மிஞ்சிக் கொண்டு, "அப்பா" என்ற கோடையிடி அலறல். மாடிப்புறத்திலிருந்து அதிர்ந்து ஒலித்தது; தொடர்ந்து இடி விழுவது போல் 'திடு' மென்ற பேரோசையும் கேட்டது.

வெளியே நின்று கொண்டிருந்த டாக்டரும் இருளப்பக் கோனாரும் விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடினார்கள்.

மாடியில், பூஜை அறையை ஒட்டியிருந்த வெளி வராந்தாவில்,மணி அலங்கோலமாக விழுந்து கால் பரப்பிக்கிடந்தான்; அவனது மண்டையிலிருந்து குங்குமச் சேறு போன்ற. ரத்தம் கொழுகொழுத்துப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

டாக்டர் சிறிதுகூடத் தாமதிக்கவில்லை. இருளப்பக் கோனார் போட்டிருந்த மேல் துண்டை இழுத்துப் பிடுங்கி,